Tuesday, 11 October 2016

உயிரே உனக்காக...

தூக்கம் கலைகிறது
துப்பட்டா நனைகிறது
நீ தொலைவாய்ப்
போனதனால்
...................

இனியெங்கே போவது
எனக்குத் தெரியவில்லை
இருட்டில் நானிருக்கிறேன்
எனக்கான ஒளியாக நீ
தனியாகத்
திரும்பி வரும்வரை

.............


காத்திருந்த கண்களுக்கு
நீ விருந்து வைக்கவில்லை
இருந்தாலும் பூத்திருக்கு
பொழுதொன்றில் வாடாமல்
வழியெங்கும் தேடாமல்
நம்பிக்கையில் பாத்திருக்கு
 
............
 
நீ வெளி நடப்பு செய்தது
என் இதயத்துக்கு தெரியாது
அது இப்போதும்
உன் வரவுக்காய்
தன் கதவைத்
திறந்து வைத்திருக்கிறது..
 

Monday, 10 October 2016

தூங்காத இரவுகள்

உன்னையும் என்னையும்
சேர்த்து வைச்சு
ஊருக்குள்ள
பேசியதெல்லாம்
எனக்கு
மண்
உண்டியலை
உடைசெடுத்த
சில்லறையின் கதையாச்சு

தீர விசாரிக்காமல்
திண்ணையில்’
இருந்து நீ
திட்டித் 
தீர்த்ததெல்லாம்
திகிலூட்டும்
சம்பவங்கள்

திருந்துவாய் என்று
நான்
நேர்த்தியுடன்
தீண்டிவிட்ட
நெய்விளக்குத்
திரிகள் எல்லாம்
உறிஞ்சி எடுத்தது
எண்ணையையும்
என்னையும்

உறிஞ்சிய
நீ எடுத்தாய்
உள்ளதெல்லாம்
உருப்படியாய்
இங்கிருந்த போது

நெரிஞ்சி முள்ளாய்
குத்துகிறது
என் உள்ளம்
உன் சுவாசம்
என் வாசலை
நெருங்காதாவென்று
ஏங்குகின்றபோது

விதி சொன்ன
பாதையிலே
வீடு கட்டிக்
குடி இருக்க
வீதியிலே
கண்ணை வைத்து

தூங்காத இரவுகளில்
தூண்டா மணிவிளக்கில்
துணிவோடு
காத்திருந்தேன்

ஊருக்குத் திரும்பி
வந்தால்
உரிமையோடு
சொல்லி அனுப்பு
நீ சொன்னாலும்
சொல்லாவிட்டாலும்
உனக்கு
நான் தானே
முதல் மனைவி


என்றோ ஒரு நாள்........



காணத் துடித்த
என் விழிகளுக்கு
ஒரு கோணத்தில்
நீ வருவதும்
போவதும்
தெரு ஓரத்தில்
தெரிகிறது

வீணாகிப் போகாது
நீ விண்ணப்பித்த
விடை தேடும்
காரணங்கள்
இடைவெளி கூடும்
நேரங்கள்
இரட்டிப்பாய்
நீழுகிறது
இழுத்து விடும்
என் சுவாசம்

பொழுது விடிந்தாலும்
இருட்டாகிக் கிடக்க
விழுந்து கொண்டுக்கும்
இலைகளைப் பிரிய
விரும்பாத
மரங்களின்
இலையுதிர் காலத்தில்

நேரத்தின் பின்
நேர்த்தியாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை

என்றோ ஒரு நாள்
நீயும் நானும்
அதே இடத்தில்
அப்படியே சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
இன்றும் ஓடுகிறது
என் கடிகாரம்
தன்
நம்பிக்கையோடு





Tuesday, 4 October 2016

உன் நிழலாக எப்போதும்...

உன் விரல்தொட்டு
உன்னோடு வழிதொடரத்தான்
முடியவில்லை
என் நெஞ்சத் தூழியிலே
ஆடுமுந்தன் நினைவில்த்தான்
இப்போதும்
நெடுநேரம் தூங்குகின்றேன்
நான் திடுக்கிட்ட வேளையிலும்
உன்
விரல் பட்ட புதுமெட்டு
என் காதோடுதான்
உரச
நீமட்டும் இப்போது
தொலைவாகிப் போனாலும்
உன் நிழலாக
எப்போதும்
உன்னோடு தான்
நான் இருப்பேன்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016


                                                                .

இறைவன் எழுதும்...

     
இழுத்துவிடும்
ஒரு மூச்சுச்
திணறடித்து
திரும்பும் திசை
மறந்துவிட்டால்
கழற்றிவிட்ட
செருப்புக் கூட
வழித்துணைக்கு
வராது....

இனிக்குமிந்த
வாழ்க்கையென்று
இரவும் பகலும்
இருட்டடிக்கும்
இறுமாந்த
இன்பங்களின்
ஈர்ப்பு
பாவம்
புண்ணியம்
இரண்டிற்கும்
நடுவில்
இதுவரைக்கும்
இழுத்துவந்த
சுயமான
சுமைகளெல்லாம்
சூட்சுமமாய்
அவன்
கணக்கில்
தப்பாமல் விழும்
அதுதான்
இறுதியாய்
இறைவன் எழுதும்
உறுதியான
தீர்ப்பு.
.
.
அருள் நிலா வாசன்
4,10.2016

உன்னை நான்....

எதிரியாய் உன்னை
நான்
எப்பொழுதும்
பார்த்ததேயில்லை
உதிர்ந்து விழும்
உன் கண்ணீரில்
நான்
கரைந்து போவதால்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016

அவன் இதயத்தில்...

       
தோப்புக்குள்ளே
தேக்குமரம்
தனித்து நிற்பதென்ன
உன் ஏக்கத்தையே
பார்த்துப் பார்த்து
அழுது வடிப்பதென்ன
உன்னை
ஊக்குவித்துப்
பக்கத்திலே
ஊறி
நின்று
பாதியிலே
உறுதியானதென்ன

உருவான
காதலிங்கு
ஊற்றெடுத்து
ஓடியதைப்
பார்த்திருந்த
மரத்துக்கும்தான்
இரக்கம் வந்ததென்ன
மரத்துப்போன
அவனிதயத்தில்
உன்னை
மறந்தபின்னும்
ஓடுவது
ஈரமுள்ள
இரத்தம் தானா என்ன..?
.
அருள் நிலா வாசன்
4,10,2016

பஞ்சு பஞ்சாய்...

மொத்தமாய் நீகொடுத்த
முத்தங்களை நான்
மெத்தையோடு
அணைத்து வைத்திருந்தேன்
அது பஞ்சு பஞ்சாய்
பறக்கிறது
நீ
கெஞ்சிக் கெஞ்சிக்
கொஞ்ச வந்த
காற்றோடு
கலந்து.....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

உன்னை நான்....

மரணத்திலும் உன்னை
நான்
மறக்க மாட்டேன்
ஏனென்றால்
உன்
மனவலியை
நான்
மணந்து கொண்டதால்....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

என்னை விட்டு.....

பிடிவாதமாய்
பிரிந்து போவாயோ
பிரிக்கப் படுவாயோ
அது எனக்குத்
தெரியாது
உன் சுவாசத்தின்
கதகதப்பில்
சுயமாய் இயங்கிய
என் இதயம்
பிறப்பின் எல்லைக்கே
போனாலும்
என்னைவிட்டுப்
பிரிக்க முடியாதது
.
.
உன் நினைப்பு
ஒன்றுதான்.
.
அருள் நிலா வாசன்

4,10,2016

குறும் கவிதைகள்

  • வாடைக்கு எடுத்துவிட்ட
    வாகனம் போல
    ஓடிக்கொண்டுருக்கு
    வாழ்க்கை..
    ..
  • பேசி வந்த கலியாணத்தைப்
    பேட்டி கண்டது
    காதல் கலியாணம்
    நேசிக்கத் தெரியாவிட்டால்
    வாசிக்கத் தெரியாத
    வீணையை வீட்டிற்குள்
    பூட்டி வைத்து
    என்ன பலன் என்றது...

  • ஓடிப்போன காதல்
    ஜோடி
    திரும்பி வந்தது
    சீதனம்
    தேடி..
  •  

  • திட்டிப் பார்த்தேன்
    நீ
    திருந்தவில்லை
    திட்டியபின்
    திரும்பிப் பார்த்தேன்
    உன்னைக்
    காணவில்லை
    என் கட்டிய
    மூச்சின்
    காய வரிகளைக்
    கேட்டதெல்ல்லாம்
    .
    .
    என்னைக் கட்டி
    அணைக்கும்
    .
    இந்தக்
    காற்றுத்தான்....
    .

.

தீண்டும் உந்தன் நினைவலைகள்



நீண்டு போன
இடைவெளியில்
தீண்டும்
உந்தன் நினைவலைகள்
மீண்டும் ஒரு
அடைமழையில்
மீண்டும்
எந்தன்
நெஞ்சாங் குழியில்.

.
அருள்நிலா வாசன்..
4.10.2016

முதுமையின் முகவரி

     
கடந்து போன காலங்களின்
கண்ணிறைந்த காட்சியெல்லாம்
கரை காண வந்த அலைகள்போல
வந்து வந்து போகுது

நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோன்றும்போது
நமக்கென்று யாருமில்லையென்ற
நினைவு வந்து மோதுது
விரும்பி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
வீணாகிப் போச்சுதென்று - மனதில்
விட்டுப் போன கவலைகளும்
அரும்பி வந்து தாக்குது
பெற்றெடுத்த செல்வங்களுக்கு நான்
இப்போது செல்லாத காசுதான் - அவர்கள்
பேரின்பமாய் வாழ்ந்தாலும்
முதியோரில்லம்தான்
என் முதுமையின் முகவரி...

4.10.2016

இழப்பதற்கு இனியெதுவுமில்லை

இழப்பதற்கு எதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு
ஈரவிழி நிறைஞ்சிருக்கு
இரக்கப்பட யாருமில்லை
இடர் படர்ந்த
வாழ்க்கையினைக்
கடந்து வந்த
பாதையெல்லாம்
நெரிஞ்சி முள்ளாய்
குத்திடிச்சு

காலுக்குச் செருப்பில்லை
காய்ந்த வயிற்றில்
பாலையூற்ற
சொந்தத்திற்கு விருப்பில்லை
கஷ்டத்தில் நானென்று
என்னைக் கழட்டிவிட்ட
பாச பந்தத்திற்கு
எந்தப் பொறுப்புமில்லை
பின்னடிக்குத் தேவையென்று
பிடித்து வைக்க நினைத்திருந்தால்
பிள்ளைகளைப்
படிக்க வைக்க
வட்டிகெடுத்த
பணத்திலேயே
பெரிய வீடு கட்டி
நானும்
வாடகைக்கு
விட்டே
என்
வயிற்றைக் கழுவியிருப்பேன்..
இழப்பதற்கு இனியெதுவுமில்லை
உசிரு மட்டும்
இருப்பிருக்கு....
.
4.10.2016

நீயும்......

அயர்ந்து சோர்ந்த பொழுதுகளில்
நீயாகத் தேடி வருவாய்
துயரத்தைமட்டும்
துணிச்சலாய்ப் பகிர்வாய்
உனக்கு நிழலாய்
எப்பொழுதும்
நானிருந்தேன்
இருக்கும் பொழுதுகளில்
உரிமைபோல்
உருவி எடுத்தாய்
எழுந்து போனபொழுதில்
என்னிடம்
எதுவுமே சொல்லாமல்
போய்விட்டாய்
அப்பவும் இப்பவும்
எப்பவும்
நான் தனியாக
இருப்பதுமட்டும்
உனக்குத் தெரியாமல்
.
.
நீயும் மரம்தானா..?


4.10.2016

Monday, 19 September 2016

நிழலாய் என் பக்கத்தில்.....



மேகம் கறுத்து
இருட்டைஇழுத்துக்
கொண்டுவர
மாலையும் மயக்கமும்
ஒன்றுக்கொன்று
போட்டி போட்டது....

நான்
பிரட்டிப் பார்க்க
நினைத்த
என் டயரின்
கடைசிப் பக்கம்
தானாகவே
மூடிக் கொண்டது...

திரும்பிப் பார்த்தேன்
உன் முகத்தை
நீயோ
எட்ட முடியாத
தூரத்தில்
என் நினைவுகளைத்
துரத்திவிட்டு
சுவருக்குப் பாரமாய்
நிழலாய்
என் பக்கத்தில்
ஆணியில் தொங்கியபடி..

மேகம் விட்ட கண்ணீரும்
என்னை நனைக்காமல்
விரிந்த குடைக்குள்
நான் மட்டும்
தனியாக
உன் நினைவுகள்
எனக்கு துணையாக
நடக்க ஆரம்பிக்கின்றேன்

சொன்னதையே
விட்டு விட்டுச்
சொல்லிக்கொண்டிருக்கும்
மழையிடம்
ஒரேயொரு
கேள்வி கேட்டேன்...

இன்னும் என்ன
சொல்லப் போகிறாய்..?

அருள் நிலா வாசன்
19.9.2016                                 .

என் கரம் தொட்டு அப்போது ......



நான் மட்டும் இப்போது

நிலவோடு பேசுகிறேன்

என் கரம் தொட்டு அப்போது

நீ சொன்ன வார்த்தைகள்

ஒவ்வொன்றும்

தனித்தனியாய்

வரம் கேட்டு நிற்கிறது

நீ வருவாய் என.....


அருள் நிலா வாசன்  
19.09.2016

Thursday, 8 September 2016

நான் தோற்றுப் போகவில்லை

துயரங்கள் மட்டுமே தொடர்ச்சியாய் என்னைப் பின் தொடர்ந்து வந்தாலும் உன் துயரத்தைத் துடைக்கத்தான் துணையாகி நானிருந்தேன்.... திரை மறைவில் நடந்த உன் திருகு தாளங்களை என் காதுகளைத் திருகச் சொல்லி மெட்டுப் போட்டு மெருகேத்திச் சொன்னாலும் திட்டித் தீர்க்க மனசில்லை எனக்கு.... நீமட்டும் போதுமென்று நானிருந்தேன் பொறுமையிழந்தவன் நீ துடித்துப் போன என் உள்ளத்தை துடைப்பக் கட்டையால் அடித்தாலும் உன்னிடம் நான் இன்னும் தோற்றுப் போகவில்லை . . அருள் நிலா வாசன். 08.09.2016

Saturday, 27 August 2016

அன்னை தெரேசா

ஏழைகளின் குழந்தைகளை
உன் வாழ்வின்
கருவாக்கினாய்
எளியமுறை வாழ்க்கைதனை
உருவாக்கினாய்
என் எண்ணங்களில்
உன் சிந்தனையைப்
பொருளாக்கினாய்
அம்மா
நீ
என் பாதையினை
நல்வழியின்
தெருவாக்கினாய்
உன் நினைவுப் பூக்களின்
வாசனையில்
நான்
வழி நடந்து
அருளாகினேன்.
.
.
அருள்நிலா வாசன்
27.08.2016

Wednesday, 10 August 2016

என் இதயம் இப்போது.....

எதிர்பார்க்காத பொழுதொன்றில் 
எதிரில் வந்த 
பிரிவொன்றை 
இடிவிழுந்த மேகங்களின்
இரக்கத்தில் நனைந்தபடி 
சந்தித்த பொழுது 
உன் பரிவை
நான் எதிர் பார்க்கவில்லை ..

நீ வரம்பு கட்டி
வைத்திருந்தும்
வழி தவறி வந்து 
விழுந்த 
வலி சுமந்த 
வார்த்தைகளில்
அழிக்கமுடியாது 
ஊறிப்போயிருந்த 
உண்மைகள் 
என் உள்ளத்தில்
உளிகொண்டு தாக்கி 
என்னைப் 
பழிவாங்கிய கீறல்கள் .

இனியும் ஒரு சந்திப்பு 
அது என்னோடு இல்லை
ஏனென்றால் 
என் இதயம் இப்போது 
உயிரோடு இல்லை... . . 

.
அருள் நிலா வாசன் 
10.08.2016                            .

Saturday, 30 July 2016

நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடந்து போன சம்பவங்களை
திரும்பவும் ஓடி பிடிக்க
முடியாவிட்டாலும்
கடந்து போன அனுபவங்கள்
எனக்கு எப்பவுமே அலாதியானது.


நள்ளிரவில் நடுங்கிக் கொண்டிருந்த நான்., இப்போது உங்களிடம் நடந்ததைச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்.
வெளி உலகுக்கும் வீட்டிற்குமிடையில் வேகமாக இழுத்துக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் வருகின்ற நல்ல நேரம், கெட்ட நேரங்களை நாம் சந்திக்கத்தான் நேரிடும். அவை கொண்டுவரும் இம்சைகளை சகித்துக் கொண்டு கடக்கத்தான் முடியுமே தவிர் தடுக்க முடியாது.


நான் இப்பொழுது சொல்ல வருவது ஒரே நாளில் நடந்த இந்த ஜென்மத்து என்னால் மறக்கவே முடியாத இரண்டு சம்பவங்கள்..
கடந்து போன வியாழக் கிழமை 27.7.2016 என்னை இழுத்துப் பிடித்து நிறுத்தி...... நில்...... கவனி...... நேற்றுப் போல நாள் இன்று இல்லை என்று அச்சுறுத்தின மாதிரி
இன்னொரு ஜென்மத்திலிருந்து இன்று நான் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பது எனக்கே ஒரு அதிசயம் தான்.


27.07.2016 வீட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தின் பின்னர் என்னை சுதாகரித்துக் கொண்டு நான் வழமைபோல் வேலைக்குப் போயிருந்தேன். என்னோடு வழமையாக வேலை செய்பவர் லீவு போட்டிருந்ததால் வேரோர் சக தொழிலாளி அந்த ஷிப்டை கவர் பண்ணுவதற்காக ஓவர் டைம் வேலைக்கு வந்திருந்தார். அவர் நடந்துதான் வேலைக்கு வருவார்.


அவர் என்னுடன் வேலை செய்யும் நாட்களில் என்னுடைய காரில் கூட்டிச் சென்று அவருடைய வீட்டில் இறக்கிவிட்டுத்தான் நான் வீட்டுக்கு வருவேன். அந்தி மாலையில் வேலை ஆரம்பித்து ஆள் அரவம் இல்லாத நள்ளிரவில் வீடு வந்து சேருவது உங்களில் பலருக்கு தெரிந்த விடயம் தானே....
நீங்க மாட்டருக்கு வாங்கோ....என்று என்னை மன்றாடுவது எனக்கு புரிகிறது.

இதோ.... இதோ...
இரண்டே நாட்களுக்கு முன்னர் வந்து என்னை ஒரு வழி பண்ணாமல் வழுக்குக் கொண்டு போன அந்த வியாழக் கிழமை வேலை முடிந்து வெளியில் வர என் காரில் பயணம் செய்யும் எண்ணம் இருந்ததால் என்னோடு வேலை செய்தவர் பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கட்டில் கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும். வாங்கவா என்று என்னிடம் கேட்டார்.
நீதானே வாங்கப்போகிறாய் நான் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் இறக்கிவிடுகின்றேன் என்று சொல்லவும் அவன் வாங்கு, வாங்கென்று வாங்கி ஒரு ரொலி நிறைய பொருட்களை வாங்கி அடுக்கி இழுத்துக் கொண்டு வந்தான்.


நானும் அவனுக்கு இணையாக ரொலியை இழுக்க உதவி செய்து என் கார் பூட் இனுள் அவனுடைய பொருட்களை ஏற்றுவதற்கு நான் என் பொருளை நிலத்தில் வைத்துவிட்டு உதவி செய்தேன். எல்லாப் பொருட்களும் ஏற்றி நானும் காரில் ஏறிக் கொண்டேன்.
 
அவனுடைய வீட்டில் அவனையும் அவன் வாங்கிய பொருட்களையும் பத்திரமாய் இறக்கி விட்டு நான் என் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினேன். காரை விட்டு இறங்கியதும் வழக்கம்போல ஹாண்ட் பாக் ஐ எடுக்க பின் கதவைத் திறந்தேன். அடடா .... என் ஹாண்ட் பாக் எங்கே?............?????????.


கைப் பையைக் காணவில்லை என்று அறிந்த பின்னர் அதன் உள்ளே குடியிருக்கும் என் கடன் அட்டையை மறந்து.....வீட்டிற்குள் நான் வந்து....கம்னு.... இருக்கவா முடியும்.
ஓடினேன்... ஓடினேன்....என் காரை ஓடினேன். அதே சூப்பர் மார்கெட் வரை ஓடினேன்.... எனக்கு முன்னாடி பலமைல் வேகத்தூரத்தில் என் இதயதுடிப்பு ஓடி கொண்டிருந்தது.


சூப்பர் மார்க்கெட்டில் வாசலில் நின்ற செக்கியூரிட்டியிடம் சொன்னேன்...என் கைப்பையைக் காணவில்லை. அவனும் என்னைக் கவலையோடு பார்த்தான். அந்த பார்வையைத் தவிர அவனிடம் இருந்து எந்தவொரு நம்பிக்கையும் எனக்கு கிடைக்கவில்லை. அந்த நேரம் நள்ளிரவில் கஷ்டமர் சேர்விஸ் வேற கடையை சாத்திடிச்சா....

என்னோடு வேலை முடித்து சொப்பிங் செய்து வீடுவரை நான் கொண்டு போய் சேர்ந்த என் சக தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைப்பு விட்டு....என் ஹாண்ட் பாக்கை கண்டியா என்று கேட்டபொழுது ஆமா அது உன் தோழில் தொங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேனே...என்றார்.
எனக்கு வேறு வழி தெரியவில்லை.. வீடு நோக்கி
ஓடி வந்தேன்.


கடன் அட்டை என்னைக் கண்ட துண்டமாய் வெட்டிப் போட்டு அது வேற கண்ணீர் அஞ்சலி செலுத்தியது போன்ற ஒரு ஃபீலிங் உடன் வீட்டை நோக்கி ஓடினேன்.

ஆனாலும் வீட்டுக்குள் நுழையும் போது பூனை போல நுழைந்தேன். நள்ளிரவு தாண்டும் நேரம் நல்ல நல்ல கனவெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஓடிக் கொண்டிருக்கலாம். அதை எப்படி நான் குழப்பமுடியும். எனக்கு இருக்கும் குழப்பம் அவர்களுக்கு எப்படித் தெரியும். பாவம் அவர்கள் தூங்கட்டும் என்று பூனை போல நுழைந்தாலும் அப் ஸ்டெயர்ஸில் ஏறிப் போய் அப்பாவி போல படுக்க முடியலையே.

கடன் அட்டையைத் தொலைத்துவிட்டேன். நல்ல வேளை அதைக் கடனாய் எடுக்கும் போது என் ஆத்துக் காரரையும் துணைக்கு அப்போது..........சேர்த்துக் கொண்டேன்.

அது இப்போது எனக்கு கை கொடுத்தது.. எப்படி என்று கேட்கிறீர்களா. அதை வைத்துத் தானே இப்போது நான் கடன் அட்டையை கான்சல் பண்ண காட் நம்பர் எடுக்க முடியும்.... என்ன.... நான் சொல்வது சரிதானே.

அந்த நடு ராத்திரியில ஆத்துக்காரரை நித்திரையில் எழுப்பி.... இஞ்சாருங்கோ.....

உங்கட கிரெடிட் காட்டை நான் துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னாலும் சரி., உங்கடயும் என்ரயும் க்ரெடிட் காட் தொலைஞ்சு பொச்சு எண்டு அந்த நேரம் சொன்னால் ஐம்புலனும் அடங்கி அன்புலன்ஸை நானே கூப்பிட வேண்டி வந்தாலும் வருமெண்டு யோசிச்சுப் போட்டு...

அடிமேல் அடி வைத்துப் போய் அவருடைய கோட்டில் இருந்த பர்சை உருவி எடுத்து., கீழ் வீட்டில் இருந்து க்ரிடிட் காட்டின் மேல் இடத்திற்கு அழைப்புவிட்டு உன்னுடைய கார்ட்டும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்... முதலில் கான்சல் பண்ணு அப்பிடீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா...?

ஹலோ.....

கான் ஐ ஹெல்ப்.. யூ என்று அங்கால இருந்து சத்தம் வர நான் சத்தமே இல்லாமல்...... எனக்கு ஹாட் அட்டாக்.... வார மாதிரி கிடக்கு....அதுக்கு முதல் என் க்ரெடிட் காட்டை கான்சல் பண்ணிவிடு தாயே என்றேன். என் வேண்டுகோள் நிறைவேற........ தண்ணி எங்க போத்திலெங்க என்று தடவி எடுத்துக் குடிச்சுப் போட்டு இழுத்துப் போர்த்துக்கொண்டு சிவ....சிவா என்று சொல்லுவோருக்கு....அபாயமில்லை எண்டு நினைச்சுக் கொண்டு.... நித்திரைக்கு குழுசை இல்லாமலே நீட்டி நிமிர்ந்து படுத்ததுதான் தெரியும். பரலோகம் போன மாதிரி நல்ல நித்திரை..


காலையில் எழுந்தேன் .... பழைய குருடி கதவைத் திறவடி....எண்டு கடமையில் இறங்கினேன்.. ஒன்பது மணி இருக்கும் வீட்டுத் தொலை பேசி.... விடாமல் அடித்தது...

அனேகமாக வீட்டுத் தொலை பேசி தொல்லையான வியாபார அழைப்புக்களாக இருக்கும் என்பதால் நான் அதை எடுக்க விருப்பம் இல்லாமல் எடுப்பேன்.

ஆனாலும் வெள்ளிக் கிழமையும் அதுவுமா விடாமல் அடிக்குதே....யாரோ எனக்கு ரொம்பவும் வேண்டியவராய் இருக்குமோ என்று எடுத்தேன்.

ஹலோ........

அடடா......எனக்குத் தெரிந்த குரலாய் இருக்கிறதே.... நானும் பதிலுக்கு சும்மா ஒரு ஹலோ சொன்னேன்.

நான்......... உன் பர்சனல் மனேஜர் கதைக்கிறேன்.. உன் பர்சை காணவில்லையா... என்று அவள் என்னைக் கேட்டாள்... பர்ஸ் மட்டுமா....காணவில்லை...என் பரம்பரையே அதுக்குள்ளதான் இருக்கு என்றேன்.

அப்படியா...... சந்தோசம்...கவலைப் படாதே

பொலீஸ் ஸ்டேசனில் அது உனக்காகக் காத்திருக்கு என்றாள்....

டக்கு.....டக்கு....டக்கு.... இது என் இதயம் அப்போது அப்படித்தான் துடித்தது. தேடி வந்த சீதேவித் தொலை பேசியைத் தடவிக் கொண்டு மெதுவாக வைத்தேன்.

எப்படி அது அங்கே போனது...?

கை பர்ஸ் காத்திருக்கு என்றுதானே..... சொன்னாள்.

கடன் அட்டையும் உள்ளே இருக்கு சொல்லவில்லையே.

என் பதட்டம் இன்னும் அதிகமாயிற்று.

என் வாழ்க்கையில நான் பொலீஸ் ஸ்டேசினில கால் வைத்ததில்லை..அது எப்பிடி இருக்கும் என்றும் எனக்கு தெரியலயே.

இப்போ....அதற்கு ஒரு துணையைத் தேட வேண்டுமே..

அரக்க பரக்க....அத்தனை வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட்டு என்னை அடையாளம் காட்டும் என் ஐடி களையும் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு என் ஆத்துக் காரருக்காகவும் அவரின் அர்ச்ச்தைகளை வேண்டிக் கட்டவும் என்னை தயார் படுத்தினேன்.

நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. வேலை விட்டு வந்து அவர் காரை விட்டு இறங்கியதும் இறங்காதுமாய் இப்படி ஒரு சங்கதி என்று மெதுவாக அவிட்டு விட்டேன். ஏறு காரில் என்றார். ஏறத்தான் வேணும். இல்லாட்டி வேறு காரில்லை.

கிளம்பியது கார் காவல் நிலையத்தை நோக்கி. துணையோடு வந்த துணிவோடு சென்று கதவைத் திறந்தேன்.

ரிசெப்சனில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். ஆத்துக்காரர் என்னைப் பார்த்து அவர்களைக் கேழும் என்றார்.. அவர்களை என்ன........கேட்கிறது....
அதோ அந்த மூலையில் என் ஹாண்ட் பாக் என்னைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பது என் கண்ணுக்குப் பளீச் என்று தெரிகிறதே..
 
எட்டி நடை போட்டேன்... எங்கிருந்தோ வந்தது ஒரு எனர்ஜி.

என் அடையாளத்தை காட்டினேன்... என் பெயரைப் பார்த்ததும் நான் வாயே திறக்கவில்லை
அதோ அந்த ஹாண்ட்...பாக்......
அது உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. ஒருவர் .........ஸுப்பர் மார்கெட்டு....கார் பாக்கில் இருந்து கையோடு கொண்டு எங்களிடம் ஒப்படைத்தார் என்றாள்...

நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள்.......

கைப் பேர்சைத் திறந்தேன்....கிரெடிட் காட் என்னைப் பார்த்து ஹலோ.... என்றது.

ஷா.....அனியாயமாய் உன்னை நான் நேற்று இரவே
கான்சல் பண்ணீட்டேனே என்றேன்.

அதை களவெடுத்து கஷ்டப்படாமல் கண்டபடி செலவு செய்து கரையேற நினைக்காமல்......கார் பாக்கில் கண்டெடுத்த என் ஹாண்ட் பாக்கை குண்டு என்று நினைத்தானோ........தெரியவில்லை
கையோடு எடுத்துச் செல்ல அவ்வளவு துணிவோடு காவல் நிலையம் வரை பயமின்றிப் பயணித்து ஒப்படைத்த அந்த புண்ணியவானின் விபரங்கள் தெரியாமல்.... நான் விழித்தபடியே..... நன்றியை மட்டும் என் நினைவெல்லாம்
நிறுத்தி வைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்தேன்.


நல்ல மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள்
என்னும் நம்பிக்கையுடன்........

நகர்ந்து போன வியாழன் ஜுலை 27 2016 என்னால்
மறக்க முடியாத ஒரு நாள்.
அருள் நிலா வாசன்
29.07.2016

Wednesday, 27 July 2016

பிடிவாதம்

விலகிப்போன நீயும்
விட்டுப் பிடித்த நானும்
விடை தெரியா
கேள்விகளுக்குள்
விக்கித் தவித்தது
உன் பிடிவாதம்....

விவாதங்களின்
வரிசையில்
வாழத்துடித்த
விண்ணப்பங்கள்
வீணாய் போனால்
நான்
உனக்காகக்
காத்திருந்த நேரங்கள்
கடனாகிப் போகும்
நீபோட்ட
கண்டனங்கள்
மட்டும்
அடி வேண்டிச் சாகும்....
,
.
அருள் நிலா வாசன்
நீண்டுபோன இரவுகளின்
நிசப்த அறைகளில்
என் தனிமைக்குத்
துணையாய்
எண்ணத்தின்
கதகதப்பில்
இருட்டின்
இறுக்கத்தில்
எதுவும்
சொல்லாமல்
வந்து
என்னில் உரசி
யன்னல்
சேலையில்
உன்னி
ஊஞ்சலாடும்
சில்லென்ற
காற்றுக்குத்
தெரியவாபோகிறது
நிம்மதியற்ற
என்
இதயத்தின்
ஒவ்வொரு
துடிப்பிலும்
நீங்காமல்
இருப்பது
உன் நினைவுகள்
மட்டும்தானென்று...
.
.
அருள் நிலா வாசன்.

மூளையை
சலவை செய்து
முட்டாள் ஆக்குவது
முகவரியில்லா
காதல்....

நன்றியுணர்வு உள்ளவனின்
வாழ்க்கை வரைந்திருக்கும்
பாதையெங்கும்
அமைதிப் பூங்காவில்
அழகு மலர்கள் போல்
அலாதியானதும்
அன்பால் நிறைந்திருக்கும்....


 மனச்சாட்சி பேச
ஆரம்பித்தால்
ஆணவம் பேசும் மொழி
மௌனம்..
.
தோல்விகளையே
தொடர்ந்து வந்தால்
கேள்விள்தான்
மிஞ்சும்....

அருள் நிலா வாசன்
வஞ்சகத்தை
விரட்டிவிட்டால்
வடிகால்கள்
தேவையில்லை....

வரம்புகளைத்
தாண்டாதிருந்தால்
வம்புகள்
தீண்டாதிருக்கும்...

வாழ்க்கையின்
வரை முறையும்
உன்
வாய் பேச்சில்
புரியும்..

அருள் நிலா வாசன்.

Tuesday, 29 March 2016

கடைசிவரை அதே குழப்பம்....


குழப்பத்தில
இருந்தாலும்
நான்
குறுக்கு வழிதேடி
கூசிக் கூசி போகயில

கட்டுமரம் பறக்குதென்று
கருங்குருவி
சொன்னதென்று
கடைசி வரை
நம்ப வைத்து
கண்ணைக் கட்டி
என்னை
காட்டில அலைய விட்டு

கண்ணதாசன் வரிகளை
கடைசிவரை
சொல்ல வைத்து
கண்ணே உன்னை
நான்
காந்தம் போல
இழுத்து வைத்து

கையுக்குள்ள
காப்பேனென்று
கதை கதையாய்
வசனம் பேசி
காணாமல் போயிட்டியே
கண்ணீரும்
கம்பலையுமாய்
காதல் வைரசுடன்
எனக்கு
கடைசிவரை அதே
குழப்பம்...............

அருள் நிலா வாசன்
29.03.2016                                     .

Sunday, 6 March 2016

நித்தமுந்தன் நினைவாலே.......

நித்தம் உந்தன் நினைவாலே
நித்திரையில்
புலம்புகின்றேன்
மொத்தமாய் நீதந்த
முத்தத்திலே
மூழ்கிவிட்டேன்


நீமட்டும்
கிடைத்துவிட்டால்
கொடிமலராய் நான்
படர்ந்திருப்பேன்


பூவிரியும் மாலையில்
உனக்காகக் காத்திருப்பேன்
மல்லிகை வாசத்திலே நான்
மடிசாய்ந்து தூங்கிடுவேன்


நானாக நானில்லை
உன்னை நம்பியே
வாழுமிந்த நாளெல்லாம்
நட்ட நடுநிசியில்
நனைகின்றேன்
பெருமழையில்
நித்தமுந்தன் நினைவாலே.......

.

அருள் நிலா வாசன்
06.03.2016                                                      


நிஜமாக நாம் வாழ

எத்தனை நாள்
இந்த
இயற்கையும்
அழகும்
இப்படியே இருக்கிறது

அத்தனையும்
அனுபவிக்க
ஒப்பனைகள்
தேவை இல்லை

இப்பனைகள்
இதுவரைக்கும்
சொல்லித்
தந்த
கதைகள்
எல்லாம்

கற்பனையை
கலைத்துவிட்டு
நிஜமாக
நாம் வாழ
இன்னும்
எத்தனை நாள் இருக்கிறது...?

அருள் நிலா வாசன்

06.03.2016                                                

காதல் ஜுரம் வந்திரிச்சு



சொல்லிப் பார்த்தேன்
உனக்கு
சொன்னதொன்றும்
புரியலயே

சொல்லாமல்
நான் விட்டும்
பார்த்தேன்
உன் சோலி
எனக்கு
தெரியலயே

சொட்டு சொட்டாய்
உதிர்ந்த மழையில்
சொந்தமாய்
வந்திடென்று
சொல்லச் சொல்லி
அனுப்பி
வைத்தேன்

நனைந்தாயா
தெரியலயே....???

நித்தம் நித்தம்
காதல் மழையில்
நனைந்ததனால்
எனக்கு

காதல் ஜுரம்
வந்திரிச்சு
கைவசம்
மருந்தும் இல்லை
கையோட கொண்டு வர......

அருள் நிலா வாசன்
06.03.2016                                                       

உண்மைகள் தொலைந்தால்...

நடிக்கத் தெரிந்தவன் விருது பெறுகின்றான்
நடிக்க மறந்தவன் எருது போலாகின்றான்
உலகமே ஒரு நாடக மேடை - அதில்
உண்மைகள் தொலைந்தால் அது வெறும் சாக்கடை.

.
.
அருள் நிலா வாசன்
06.3.2016
                                                                  

காணத் துடித்த என் கண்களுக்கு.......

உன்னைக்
காணத் துடித்த
என்
கண்களுக்குள்

நம்பிக்கை வைத்தாய்

கண்ட பின்னர்
வாழ்வதற்காய்
கனவுகளைக்
கணக்கில் வைத்தாய்

காண வந்த காட்சி
எல்லாம்
என்
கனவாகிப்
போகுமென்று
கருக் கொண்ட
மேகங்கள்
கதை சொன்னபோது

கட்டி வைத்த
ஆசைகளை
அவிட்டு
கொட்டி விட்டேன்
கரைந்தே போகட்டும்
இனித் தேவை
இல்லையென்று........

அருள் நிலா வாசன்

06.03.2016                                                       

உன் பெயரை உச்சரித்தால்.....

உன் பெயரை
உச்சரித்தால்

உதடுகள்
உதறுது

உன் மூச்சை
உணர்ந்து கொண்டால்
உள்ளமே
உருகுது

உன் காலடி
ஓசை மட்டும்
எனக்குள்ளே
கேட்குது

ஓடி வந்து
பார்த்தாலே
உன்
உருவம் தான்
தெரியுது

என் பெயருரோடு
இணைத்து
அழகு பார்த்தேன்
அது
ஒட்டிக் கொண்டது
என்னோடு

உன்
உத்தரவின்றி
என்னுள்ளே வந்த
உன் பெயர்தான்...........

அருள் நிலா வாசன்

06.03.2016                                                    



என் கனவே நீ கலையாதே..





உள்ளம் எல்லாம்
உனதாய் நினைத்து
ஊருக்குள்ளே
உன்னை அழைத்து

உள்ளதை எல்லாம்
சொல்ல நினைத்து
உசாரை கொஞ்சம்
வரச் சொல்லி அழைத்து

தாங்கிப் பிடிக்க
தைரியமின்றி
ஊண்டிக் கொள்ள
உன் உள்ளத்தை வைத்து
உரக்கச் சொன்னேன்
உன் காதில் கேட்க

விழுந்த அடியில்
விழித்து பார்த்தேன்
வீட்டில் நானும்
மாட்டிக் கொண்டேன்...

என் கனவே நீ கலையாதே......
.

அருள் நிலா வாசன்
06.03.2016                                                   
                                                                     

Friday, 4 March 2016

நானே தான்

உதட்டிலிருந்து
உள்ளம்வரை
நல்ல சுகம் தந்துனக்கு
நாள் குறிப்பது
நான் தான்....
.
.

அருள்  நிலா வாசன்
04.03.2016                           

அன்பு

கூன் விழுந்த பின்பும்
கூட வரும்
அன்பு

.
.
அருள் நிலா வாசன்    

வாடிக்கைதானோ என்று.



பாதை மாறிவந்த
பதட்டத்தில்
படலையைத் தள்ளிவிழுத்தி
உள்ளே நுழைந்தது
சுழன்று வந்த
ஊதக் காற்று...

இதுதான்
சாட்டென்று
சத்தமேயில்லாமல்
சரிந்து படுத்தது
பார்த்துகொண்டிருந்த
பட்டமரம்..

பக்கத்தில் நின்ற
பனைமரமும்
தன் பங்கிற்கு
பாழையைக் களட்டிக்
கீழே போட்டது..

பாழை விழுந்த சத்தத்தில்
திடுக்கிட்ட
தரையில் நின்ற அணில்
தாவிப் பாய்ந்த
மாமரத்தில்
பழுத்திருந்த மாம்பழம்
பக்கத்தில் சொல்லாமல்
தொப்பென்று
விழுந்தது....

மாம்பழத்தை எடுக்க
வந்தவளின்
அவசரத்தில்
படிக் கல்லுக்கும்
பங்கிருந்து
தடக்கியவள்
சாரீரம்
சறுக்கி விழுந்தது..

விழுந்தவளைத் தூக்கிவிட
வீட்டுக்குளிருந்து
ஓடி வந்தவனைப்
பார்த்து
வாடிக்கைதானோவென்று
படலைக்குள்
வந்த கிழவி
பட்டென்றுகேட்ட
கேள்விக்கு

வெட்டி வேரு வாசம்
விடலைப் பிள்ளை நேசம்
வானலையில்
பாட்டு
மறுபடியும்
காற்றோடு
வீம்பாய் கலந்தது
.
.
அருள் நிலா வாசன்

04.03.2016                                              

மலர்களைப் போல

மனங்களில் பூத்திருக்கும்
பொறாமையைப்
பிடுங்கி எறியுங்கள்
மலர்களைப் போல
மகிழ்வாயிருக்கும்
உங்கள்
அகமும் முகமும்.
.
.
அருள் நிலா வாசன்

04.03.2016                                  

தானம்

உயிர் பிரிந்த பின்னும்
உலகத்தைக் காண
உனக்கான வரம்
உயரிய கண்
தானம்.
.
.

அருள் நிலா வாசன்
04.03.2016                              


ஒளியான எதிர்காலம்

விளையாட்டாய்
விரிந்திருக்கும்
எளிதான எண்ணத்தில்
ஒளியான எதிர்காலம்
அமைதிக்குள்
ஓளிந்தே
அழகாய் விரிகிறது..
.
.

04.03.2016
அருள் நிலா வாசன்.   


உன் கேள்விக்கு பதில் ~


ஓடித் திரிந்த
என் நாடித்துடிப்பு
ஒரு கணம்
அப்படியே நின்றது
வேடிக்கை பார்த்த
அத்தனை பேரும்
உன்னை
அடித்திருந்தால்
அதிசயமில்லை
பதிலாக
என்னைப் பார்வையால்
தள்ளி விழுத்தினர்

ஓடிப் போகலாமா
என்று நீ
கேட்டதுதான்
எனக்குக் கூட
வேடிக்கையாய்
இருந்தது..
பார்த்தவர் கண்களுக்கு
பதிவிரதை
நானென்று
எப்படித்தான்
நான் நின்ற இடத்தில்
நிரூபிப்பது..?
முதல் முதலாய்
உன் முகம்
இன்று தானே
எனக்கு
அறிமுகம்.....
உன் கேள்விக்கு
பதில்
உன்னிடம்தான்
இருக்கிறது
என் சுவாசக்
காற்றோடு
கலந்திருக்கும்
என்னுயிரில்
உயிர் நிலையாகக்
கலந்துவிடு
அதை நான்
உணர்ந்தால்
அப்போது
தெரிந்துவிடும்
.
.
04.02.2016
அருள் நிலா வாசன்        .

முகம் பார்த்து ஜோசிகம்.



ஜாதகத்தைப் பிரித்து வைத்து ஜனனத்திலிருந்து மரணம்வரை அது என்ன சொல்லுது எண்டு இடையிடையே கிளி ஜோசியம் கேட்டு அதுக்கும் மேல கைவிரலைத் தொட்டு தொட்டு இழுத்துப் பார்த்து அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவதானமாக எடுத்து வைத்து., கரடு முரடான மேடும் பள்ளமும் வருவதே தெரியாமல் வருகின்ற வாழ்க்கையில்

          
                  ஏற்றத்தை எதிர் பார்த்துப் படிக்கட்டுகளில் கால் வைக்கும் ஆட்களை விட நான் கொஞ்சம் வித்தியாசமானவர் எண்டுதான் சொல்ல வேண்டும்.
காலம் கொண்டு சென்ற பாதைகளில் அனுபவங்களை பாடமாகக் கற்றுத் தெளிந்து பயணித்துக் கொண்டிருந்த என் வாழ்க்கையில்., ஒரு திடீர் திருப்பம் வரப்போவதை எனக்கு முன் கூட்டியே சொல்ல வந்த., என்னை எதிர்பாராத விதமாய் சந்தித்த முன் பின் அறிமுகமாகாத ஓருவர் என்னைக் கண்ட உடனேயே முகம் பார்த்துக் குறி சொல்லி என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

அந்த ஒரு நாள் மாலை என்னை வாவென்று வருந்தியழைத்தது போன்ற அந்த சம்பவம்.

                  மதியம் சமைத்துக் கொண்டிருந்த பொழுதே இன்று எப்படியும் இவர்களைப் போய் நான் பார்த்தேயாக வேண்டுமென்று ஏனோ என் மனம் அப்படித் துடித்தது. சரி போவோமேயென்று எனது சின்னப் பர்ஸைத் துணையாகக் கூட்டிக் கொண்டு பல நாள் பழகிய ஒரு வறிய குடும்பத்தைப் பார்க்கவென்று பழகிய பாசம் என்னில் பொங்கி வழிய நான் இருக்கும் ஊரை விட்டு ஒன்ரரை மணி நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து போயிருந்தேன்.


என்னைப் போலவே கண்டதும் சந்தோசக் களிப்பால் குடும்பமே கட்டி அணைத்து வரவேற்று அன்பை என் மீது மாலை முழுவதுமாக பொழிந்தார்கள். பெண்ணாகப் பிறந்துவிட்டால் பொழுது சாயுமுன்னர் வீட்டிற்குள் ஒரு பொம்மையாய் இருந்திட வேண்டுமென்ற எண்ணம் என் அடிமனதில் உறுதியாய் ஊறியிருக்க., இன்னொரு நாள் இதுபோல சந்திக்கலாமென்று அவர்களிடம் சொன்னாலும் பிரிய மனசின்றி அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன.? என்ன அவரசம்.... என்ன அவசரம் என்ற பாடல் வர பல வருடங்களூக்கு முன்னரே அப்படி சொல்லிச் சொல்லி என் கையை பிடித்துக் கொண்டே பேசிப் பேசி வாசல் கதவுவரை என்னோடு குடும்பமே வந்தார்கள்.


                 நானும் வாசலுக்கு வரவும் அவர்களின் முன் வீட்டுக்காரரும் என்னைக் கண்டவுடன் ஆஹா...அக்கா எப்பிடி இருக்கிறீங்க என்று என் கையைப் பிடிக்கவும்., என் பயணம் சற்றுத் தடங்கலாகியது. அதே தெருவில் குடியிருக்கும் நகைக் கடைக்கார அண்ணனின் மனைவி அந்த வழியாக வந்து ஆஹா எப்ப வந்தீங்க என்று சொல்லிக்கொண்டு அவ வாங்கி வந்த மரக்கறிக்கூடையை கீழே வைத்துவிட்டு என் கதை கேட்கும் நேரமிது என்று என் மீது கைப் போட்டு சாய்ந்துகொண்டே கதைத்தார்.


இந்த நொடி., இந்த இதே நொடிதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது.


எனது நண்பர்களின் வீடு ஒரு தெருவின் கடைசி வீடாக இருந்தது. அடுத்த தெருவிலிருந்து திடேரென்று இந்தத் தெருவுக்குள் நுழைந்த ஒரு வயதான வெள்ளைச் சேலை கட்டிய, கருத்த உருவமுள்ள வெளுத்த தலை வயதை வெறுமனே எடுத்துக்காட்ட ஒரு பொன் நிறமான வேலும் கையில் கொண்டு சாஸ்திரம்...ம்..ம்...ம்..ம்..ம்.,ம் என்ற குரலோடு அப்பெண்மணி எம்மருகே நெருங்க.,


                முன் வீட்டுத் தாயும் பிள்ளைகளும் திடீரென்று தமது கதவுக்குள் நுழைந்து கதவை தாழ்பாள் போட்டுக் கொண்டு மறைந்துவிட்டார்கள்.
வந்த கிழவி என்னைப் பார்த்த அந்தக் கணமே
வார்த்தைகளை வரிசையாகக் கொட்டிக் கொண்டு போனதில் என் இறந்த காலமும்., நிகழ்காலமும் வெள்ளைத் துணியில் பச்சைச் சாயத்தைக் கொட்டினால் அது எப்படி எடுத்துக் காட்டுமோ அப்படி உண்மையாகவே இருக்க


                 ஒவ்வொரு வரியாக அவர் வாய் மொழி வந்து காற்றுடன் கலந்து எனக்குள்ளே ஓரு அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்தவும் எனக்கு தலை முதல் கால் வரை வியர்க்கத் தொடங்கியது.
அவர் சொன்ன உண்மையான சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல நான் பாசமாக பார்க்கப் போயிருந்த அந்த ஏழைக் குடும்பத்தினருக்கும் எல்லாமே தெரிந்திருந்ததனால் அவர்களும் அதிசயப் பட்டார்கள்.
அந்தக் கிழவியோ இறந்த காலம், நிகழ்காலத்தோடு நிறுத்திவிடாமல் என் எதிர் காலம் எப்படி எப்போ என்ன நடக்கப் போகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார் என்பதை நான் உணர நீண்ட நாள் எடுக்காது என்பதை அந்தக் கணம் நான் உணரவேயில்லை.


                 என் முகத்தில் அப்படி என்னதான் எழுதி இருந்ததோ நான் அறியேன். முகத்தில் எழுதியிருந்ததைப் படிப்பது போன்று மூச்சே விடாமல் அத்தனையையும் படித்து முடிப்பது போல கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் மூன்றையுமே சொல்லி முடித்த பின்னரே அந்தக் கிழவி மூச்சு விட்டார்.


நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் என்று தழு தழுத்த குரலில் அவரிடம் கேட்டேன்.
நான் கதிர் காமம் போகும் வழியில் உன்னை நானிங்கு சந்திக்கிறேன். முனீஸ்வரத்திலிருந்து வருகிறேன். கதிர்காமத்தில் உன் பெயரில் நான் பூசை வைக்கிறேன். நான் சொன்னது நிஜமாயிருந்தால் நீ...... எனக்கு..... உடுபுடவை வாங்கித் தாவென்று சொல்லி ஒரு வெள்ளைத் துணிக்குள் சுற்றி வைத்திருந்த ஒரு கடவுள் சிலையை காட்டினார்.


                 அதைப் பார்த்த அந்த நொடி நான் எப்படி இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு கணம் நான் அமைதியாகினேன்.
எனது சின்னப் பர்ஸை திறந்தேன். அதில் பஸ் காசைத் தவிர பெரிய ஒரு தொகை நோட்டாகத்தான் ஒரே ஒரு நோட்டு இருந்தது. அந்த வறிய குடும்பத்திடம் இதை மாற்றித் தர முடியுமா என்று கேட்க என் மனசு தப்பு என்று சொல்லி மனதை மாற்றிக்கொண்டே சிந்தித்தேன்..

      
                 இனி எங்கே நான் இந்த கிழவியை சந்திக்கப் போகிறேன். இதையே என் காணிக்கையாகக் கொடுத்திடுவோமென அப்போது எனக்கு அது பெரிய தொகையாக இருந்தாலும் நான் முழு மனதோடு அந்த கிழவியின் கையில் கொடுக்க எல்லோரும் அந்தக் காட்சியில் அதிசயம் ஆனால் உண்மை என்று வியந்து போய் நின்றார்கள்.


                 சில வேண்டுதல்களை யார் கண்ணிலும் படாமல் நீ செய்ய வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட நாள் கணக்கும் அந்தக் கிழவி எனக்கு சொல்லித் தந்தார். அதன் வழியே நான் தொடர்ந்தேன். அவர் சொன்னபடியே அந்த நாள் கணக்கில் என் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நடந்து என் வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிப் போட்டது அவர் சொன்ன வார்த்தைகள் அப்படியே என் வாழ்க்கையோடு பயணித்தது.
சில வருடங்களில் பின்னர்........


                 நான் எதிர் பாராத விதமாக ஊருக்கு போயிருந்தேன். எனது பிரயாணத்தில் முக்கிய அம்சமாக முன்னேஸ்வரக் கோயில் விடயம் முக்கிய இடம் பிடித்தது. அவர் சொன்னது என் நினைவில் உறுத்திக் கொண்டே இருந்ததனால் நான் கோயிலில் குடியிருக்கும் இறைவனுக்கு உடுபுடவை பழங்கள் தட்டில் எடுத்துக் கொண்டு பூசைக்கு ஆவலோடு போய் அந்த கிழவியை தேடினேன்.


இறைவன் காட்சி தருவது எப்போது எங்கு எந்த வடிவத்தில் என்று எமக்குத் தெரிவதில்லை என்பதை அந்த நாள் அந்த நேரம் நான் உணர்ந்தேன்.
நான் தேடிய அந்தக் கறுத்தக் கிழவியை நான் பார்க்கவேயில்லை.....

அதிசயம் ஆனால்........உண்மை....    .
.
04.02.2016


Wednesday, 24 February 2016

மீண்டுமவள் குழந்தையாகிறாள்.

கருவறை கிழித்துப்
பெருவலி கொடுத்து
கூச்சலிட்ட
குழந்தை முகம்பார்த்து
பொக்கிஷமாயவள்
பெற்றவலி மறந்து
பொங்கியணைத்து
புது யுகமானாள்..


வேதனை மடியில்
இரவும் பகலும்
ஈடு கொடுத்து
இடையில் தாங்கி
நடைகள் மறந்து
தொடையில் தாங்கியும்
துன்பம் மறந்த அம்மா...


போதும் போதும்
என்றாகுமுன்னே
பொன்னும் மண்ணும்
பொலிவுற சேரும்
இனிதான வாழ்வும்
இணைத்தவள்
பாவி
பேரன் பேத்தியை
உயிராய் வளர்த்து
காலத்தோடு
கலந்தே
காற்றுப்போல
எடையும் குறைந்து
மீண்டுமவள்
குழந்தையாகிறாள்..

பிள்ளைகளேனோ
பிரிவினை காட்டி
முதியோர்
இல்லம் தேடுவதில்
முன்னோடிகளாக.....
.

.
23.02.2016      
  

உன் முகம் மட்டும்

மனசும் மனசும்
ஒட்டுமென்று
என் மனசை எல்லாம்
பேப்பரில் கொட்டி
சோறு பூசிக்
கவரில் ஒட்டி
சொந்தங்கள்
யார் கண்ணும்
என் மீது படாமல்
பெட்டியினுள்
நான் தள்ளிவிட்ட
என் ஆசைக் கடிதம்..

காப்பு வளையல்
கொலுசென்று
கம்பு வித்து
வாங்கி வைத்தேன்
கண்ணாலம்
காட்சியென்று
கைபிடிக்கும்
நேரமதில்
கண்ணூரு படாமல்
பேச்சியம்மனிடம்
வாய் பேசாமல்
வேண்டிக்கிட்டேன்...

சோப்பு சீப்பு
கண்ணாடி
சொண்டு சிவக்க
வாய் பூச்சு
கையோடு வாங்கிவரக்
கண்ணாளா
உன்னிடம்
காசு இருக்கா
தெரியலயே...

உன்னைத் தேடி வரத்
துணிவுமில்லை
என் கடித்ததுக்கு
பதிலுமில்லை
ஊருக்கு வரும்
பஸ் எல்லாம்
ஏறி இறங்கிப்
பார்க்கிறேன்.

என் நினைவில்
இருக்குமந்த
எனக்கான
உன் முகத்தை மட்டும்
இதுவரைக்கும்
காணலையே..



என்னை உனக்கு
நினைவிருக்கா......?

அதுவும் தெரியலயே..?
.
.

23.02.2016

உள் நோக்கத்துடன் வந்தவனுக்கு

திட்டிக் கொண்டே போன
மேகத்தை
தலை நிமிர்ந்தும் பார்க்காது
திடகாத்திரமாய்
திரும்பத் திரும்ப
திகிலூட்டும் ஓரிசையில்
எல்லோருக்கும்
எச்சரிக்கை
விட்டது..

ஊர்ந்து கொண்டே போன
உள் நோக்கத்துடன்
வந்தவனுக்கு
கவ்விப் பிடிப்பதில்
மட்டும் தான்
கவனமிருந்தது..

இழுத்துக் கொண்டே போன
நேரத்தைக் கணக்கிடாமல்
அங்கேயே
அகலக் கால் வைத்து
அணைத்து
உள்ளிழுத்து
உட்கார்த் துடித்தது
கோழி
தன்
வரவு செலவை
வாய் விட்டெண்ணிக்
கணக்குப் பார்க்கத்தான்....
.
.

23.02.2016   

யாருக்கு நான் பாரம்

தேடிவந்த அன்பு
இன்று தூரமாய்
போனதென்ன
சாலையோரம்
சருகுபோல
இருந்த என்னை
ஓடி வந்தே
அரவணைத்த
கள் வடிந்த
உள் நெஞ்சம்

தூசு படிந்த
உன்னிதய வாசலுக்கு
நான் துடைப்பமான
அந்நொடிப்பொழுது
உள்ளே நுழையவிட்டு
என் மனதை
ஊனமாக்கினாய்....

தெருத் தெருவாய்
தேடி பின்பு
வாடிப் போன
என் நெஞ்சம்
இன்று ஈரமாய்
விதைத்து வைத்த
வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
முளைத்த பின்னும்
பிடுங்கி எடுக்க
நினைப்பதென்ன ....


சருகாக இருந்திருப்பேன்
சாலையோரம்
இன்னேரம்
யாருக்கு நான் பாரம்
.
.
23.02.2016    


நெற்றிக்கு திலகம்...

பூவும் பொட்டும்தான்
எமக்கான வாசம்
புன்னகையும்
புனிதமும் தான்
உனக்கான நேசம்
யாவும் எமக்காக
படைத்தவன்தான்
என்னாளும்
நெற்றிக்கு நீ பூசும்
திலகம்.......
.

.
23.02.2016

Monday, 15 February 2016

என் காதல் ஓவியமாய்.

நீதானா என்
இதய வீணையை
மறுபடியும் மீட்டியது
இசையில் இணைந்தே நான்
உன் பாடல் வரிகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
என் காதல் ஓவியமாய்...
,
,
அருள் நிலா வாசன்

16,02,2016                                  .

இதுதான் காதலா..?

பார்வைகள் பரிமாறி
பந்தாடிய ஓருணர்வில்
உள்ளங்கள்
உரசியதால்
உருவான
இடி மின்னல் முழக்கத்தில்
இதயங்கள் இடம் மாறி
உள்ளே இழுத்துவிட்ட
ஒரே மூச்சுக்குள்
இரட்டிப்பு ஆனந்தம்

இதுதான் காதலா..?
.
.
அருள் நிலா வாசன்
15.02.2016                                           .

காதலே நீ வாழ்க...

சிரிப்பைச் சிந்தி
உந்தி மிதிக்குது
உண்மையாய்
வளர்ந்த
உயரிய காதல்
கூடவே பயணிக்கும்
உள்ளத்தை
சந்தித்த
பெண்மையை
நெருங்காது சாதல்..

காதலே நீ வாழ்க....
..

.
16.02.2016 
அருள் நிலா வாசன்                 .

காதல் வலியா...?

போதும் போதும் என்றேன்
நிறுத்தவில்லை
நீ பொறுமையிழந்து
பொழிந்தது
போதும்
இப்போதும் சொல்கின்றேன்
உனக்குள் இருப்பது
யாரென்று சொல்லு
அது என்பெயர்
இல்லையென்றால்
இப்போதும்
எப்போதும்
அதைக் கேட்கும்
துணிச்சல்
எனக்கில்லை
போதுமா.....?

இதுதான் காதல் வலியா...?
.
,
அருள் நிலா வாசன்.

16.02.2016                                                  .

என் மனசைப் போல.

உன் வரவுக்காகத்தான்
நான் இங்கு
காத்திருந்தேன்
பட்டாம் பூச்சிக்குமா
உன் மீது காதல்
இதோ
நானே அதை
உன் கையில்
சேர்க்கின்றேன்.
கசங்காமல்
பார்த்துக்கொள்
என் மனசைப் போல.......
.
.
அருள் நிலா வாசன்

15.02.2016                                .

எல்லை இல்லா காதல்!!!

எல்லை இல்லா காதல்!!!
“””””””””””””””””””””””””””””
 
கொண்ட காதல் மட்டும் நிஜமென்றால்
நிறமும் பணமும் நிஜமல்ல
நீண்ட காதல் மட்டும் போதுமென்று
ஆயுள் வரைக்கும் கூட வரும்


பூவும் இலையும் பரிசாகும்
புன்னகை கூட பரிமாறும்
யாவும் இயற்கையின் படைப்பாகும்
உணர்ந்தவர் இதயம் கனியாகும்!!!

.

(அருள் நிலா வாசன்)

15.02.2016 
 

Saturday, 6 February 2016

நீயே சொல்லு....

கண்களை விரித்துப்
பார்த்தேன்
பகலெல்லாம்
தூங்கியதுபோல்
பிரமை
கண்களை
மூடிக்கொண்டே
நினைவுகளை
தடவிப் பார்க்கிறேன்
யன்னலை மூடி
நீ சொன்னதையெல்லாம்
நான் கேட்கத்
துடித்த பொழுது
தாங்குமா
உன் நெஞ்சம்
தூங்கு என்றாய்
வீடெங்கும்
உன் சுவாசம்
வந்து வந்து
போகிறது
உயிரே
உனக்காகத்தான்
இன்னும்
நானும்
சுவாசிக்கிறேன்....

காற்று என் இதயத்தைக்
கடனாகக்
கேட்கிறது
கொடுக்கவா
இல்லை
தடுக்கவா..
நீயே சொல்லு....

 .
.
06.02.2016                                .

நிறைகுடமானேன்

தொட்டு வைத்த
புள்ளிகளில்
தெரிந்தது
உந்தன்
பூமுகம்

என் நெஞ்சில்
நின்றவை
தொடராய்
இணைய
நிறைவாய்
உந்தன்
பெயரையும்
வரைந்தேன்
உன்
பார்வை பட்டே
நான்
நிறைகுடமானேன்
.
.
06.02.2016        
                                 .


எனக்குள் நீ........

அதிகாலை நித்திரையை
அப்படியே துரத்திவிட்டு
உன் நினைவுகளை
இழுத்து வைத்த
என் படுக்கையை
எடுத்து விரித்து
அதன் மீதே
உட்கார்ந்து
என் இருவிழிகளை
இழுத்து மூடினேன்..

கண் நிறைஞ்ச
காட்சிகளாய்
வான் வெளியில்
பறவைகளின்
வரிசைப் படுத்தலில்
உன் கால் தடங்கள்
இன்னும் என்
கண்களில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
என் நம்பிக்கையில்
நாள் முழுதும்
என் உயிர்
நீதானே......

.
.
06.02.2016
.
.                           



Friday, 8 January 2016

புலம் பெயர்வை உறுதிப்படுத்தி........

குறுகிய காலத்தைக்
குத்தகைக்கு எடுத்த
குளிர் காற்றுக்கும்
மழைக்கும்
இடையில்
குற்ற உணர்வில்லாத
சின்னச் சின்ன
ஒப்பந்தம்..


காப்புறுதி இல்லாத
வீடுகளைக்
கண்டபடி
காலி பண்ண
வாய்க்கு
வந்தபடி
திட்டி
வழி மண்டலத்தில்
தன்
கையெழுத்தை
வெள்ளைப்
பத்திரத்தில்
போலிகளாய்
போட்டு வைக்க...


மேலிடத்து
மோகங்களின்
அதிகாரம்
மொத்தாமாய்
இறங்கி வந்து
இருப்பிடத்தை
இழுத்து மூட..


வேற்று மொழி
விழங்காது
வெட்கித்த
பறவைகள்
வீடிழந்த சோகத்தை
வாய் நிறையக்
கவ்விக் கொண்டு
தன்
தாய் மொழியில்
பாட்டெழுதி
மனப் பாரத்தை
அழுத்தி
பாடிக்கொண்டே
தொடர்கிறது
புலம் பெயர்வை
உறுதிப்படுத்தி........


அருள் நிலா வாசன்
08.01.2016                                       

                 

Thursday, 7 January 2016

இன்பமாய் பயணிக்க.....

இத்தனை நாள்
காத்திருந்தேன்
நீ
எங்கு போயிருந்தாய்...


இரவுக்குள் பகலும்
பகலுக்குள்
இரவும்
மாறி மாறிப்
பயணிக்க
என்னை
இழுத்துக் கொண்டு
போகிறது
இருட்டுக்குள்
வெகு நேரம்..


யாரோ சொன்னார்கள்
கொஞ்சு மொழியில்
உன் பஞ்சு
வர்ணங்களை
என் மேல்
அள்ளிச்சொரிய
நீ
அடுத்த வாரம்
வருவதாக
நான் ஆடை
அணிகலன்களெல்லாம்
எடுத்து வைத்துக்
காத்திருக்கின்றேன்
உன்னோடு
இன்பமாய்
பயணிக்க.....


அருள் நிலா வாசன்
JANUARY 2016                                       .

Monday, 4 January 2016

இன்னும் வீடு திரும்பவில்லை

ஊரறியத் தாலிகட்டி
உருட்டி விட்ட
நாணயமாய்
தன்னருகில்
தலை குனிந்து
தனக்காக
வந்தவளை
ஊரே பார்க்கத்
தலை குனிய
வைத்தவனாய்..


அவள் நித்திரையை
அடகு வைத்து
நித்தமொரு கூலிக்கு
நாள் முழுதும்
அரிசி புடைத்து
பொறுக்கியெடுத்த
சில்லறைக்கு


உச்சி வெய்யில்
மண்டையில
இறங்கி நின்று
சூடடிக்க
கூட வந்த
பசியும் அவள்
வயிற்றைத் தின்று
ஏப்பம் விட


இழுத்து இழுத்து
அரைச்சு வைச்ச
மீன் குழம்பும்
இரால் பொரியும்
ஊரெல்லாம்
மணத்தது...


அவனையே நினைத்து
அவள்
கூட்டி வைத்த
கறியின் ருசி
நேற்றுவரை
காத்திருந்த
அவள்
நீங்காத பசி
நாக்கைச்
சுண்டிச் சுண்டி இழுத்தது....


ஊருக்கு பேரழகன்
ஊரளந்த கால்
வலிக்கு
உருவிவிட
ஒருத்தியென்று
பொருத்தம் பார்த்து
கட்டி வைச்ச
உத்தமியின்
பெற்றோரைக்
குற்றம் சொல்லி
என்ன பலன்....


மன்மத ராசனென்று
ஊரெல்லாம் சிரிக்குதென்று
மனசெல்லாம் அரித்துப்
புண்ணாகி
உள்ளிருந்து அழுபவளின்
உணர்ச்சிகளைக்
கொன்றுவிட்டு....


ராசிபலன் கேட்கவென்று
மறுபடியும்
மந்திரத்தில்
சாத்திரியின் வீடுதேடி
பரிகாரம் பண்ணிவிட்டால்
சந்ததிக்கு விடியுமென்று
சாதகத்தைச் சுருட்டியபடி
சத்தமின்றிப்
போன அம்மா
இன்னும்
வீடு திரும்பவில்லை

அருள் நிலா வாசன்....
04.01.2016                                                       .


Saturday, 2 January 2016

நிறம் மாறாத பூவாக...

உரு மாறிப்போன
உன் கட்டான
முக அழகின்
ஒட்டாத புருவத்தில்
முன் வழிதவறிய
பயணத்தின்
ஒற்றை முகவரி
ஒட்டிக் கொண்டிருந்தது


காத்திரமான திருப்பத்தில்
காத்திருந்த
என் விருப்பத்தை
விளக்கிச் சொல்ல
எதுவும்
விளங்காதது போன்ற
உன் நடிப்பில்
என் இதயச்சுவரில்
எத்தனை வெடிப்புக்கள்..


காலத்தை இடம் மாற்றிக்
கடனெடுத்து தடம் பதித்த
கால் தடங்கள்
கானலாய் உருவெடுத்த
உன் உள்ளத்து
எண்ணங்கள்
கருவறுத்துக்
கோணலாய்
கீறியே முடித்தது....


அதையறியாத
உன் சிரிப்பிற்குள்
ஓழிந்திருந்த
என் அத்தனை
தோல்விகளும்
வேதனை தாங்காமல்
வெளி நடப்பு
செய்தாலும்
ஒலியின்றி
என் மனம்
இன்னும்
அங்குதான்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.


வாடிப் போனாலும்
இன்னும்
நிறம் மாறாத பூவாக...

அருள் நிலா வாசன்.
03.01.2016                                         .

Friday, 1 January 2016

இன்னொரு தடவை வழியனுப்பி வைக்காதே...

தேர் முட்டியில்
தெய்வங்கள்
திசைபார்த்து ஏறும் போதே
உன் கண்களில்
முட்டிய கண்ணீரில்
கவலை
ஒட்டிக் கொண்டிருந்தது


வட்டிக்கெடுத்து
வளையல்
சங்கிலியென்று
வாய் கூசாமல் கேட்ட
அவன்
சீதணப் பட்டியலுக்கு
வஞ்சகமில்லாமல்
நீ போட்ட
அத்தனை பவுணும்
வளைகாப்பு முடிய
அடகு கடை
அலுமாரியில்
அலங்காரப் பொருளாம்...

கேள்விக் குறியாகி
வேள்விக்குக்
கொண்டுபோன
வெள்ளாட்டின்
நிலைபோல
வெறுங்களுத்தோட
அல்லாடும்
அவளுக்கு
விலையென்ன பேசி
விற்றானோ
படு பாவி....

கோட்டுக்குப் போனாலும்
செல்லாது
உன் வழக்கு
கொந்தளிக்கும்
உன் மனசு
கோடி பெறும்
கலங்காதே....
கொட்டிக் கொடுத்து
கட்டி வைச்ச
தாய் மனசை
நோகடிச்சு
பட்டி வளர்க்கத்தான்
போனானோ
வெளி நாடு...?

கொம்பனி சொந்தமென்று
கோடையில
சொன்னவன்
மாரிமழை
பெய்யமுன்
கந்தறுந்து போனானோ..?

கிளிபோல வளர்ந்த பிள்ளை
கண் கலங்காமல்
இருக்குமென்று
நீ கண்ட கனவெல்லாம்
தெளிவின்றிக் கலைந்தாலும்
வாயும் வயிறுமாய்
வீடு தேடி வந்தவளை
இன்னொரு தடவை
வழியனுப்பி வைக்காதே
அவனை நம்பி.....

அருள் நிலா வாசன்.                .

இந்த நொடியில்

திகிலூட்டும் சம்பவமாய்
திசை திரும்பிய
உன் மறுவடித்தில்
எதேர்ச்சையாய்
உன்னை
நான்
சந்திக்க நேர்ந்த போது
உன் கண்ணில்
தெறித்த
கேள்விக் குறிகள்
என்னைத்
திடுக்கிட வைத்தது...


உணவு மேசையில்
உன்னோடு
ஒட்டிக் கொண்டிருந்த
அவளின்
அவசர கவனத்தில்
நீ மட்டுமல்ல
நானும் இருப்பதனால்
எனக்குள்
நானே ஒளிந்து
என் உணர்வுகளைக்
கொன்றேன்.....

நீ என்னோடு
பயணித்த
அந்தக் குறுகிய
பயணத்தில்
தொலைந்தது
எல்லாமே திரும்பக்
கிடைத்திருக்கிறது
என் வாழ்க்கையைத்
தவிர....

அதை நான்
இந்த நொடியில்
உணர்ந்தேன்
இன்று
நீ பார்த்த பார்வைக்குள்
ஓழிந்திருந்த
உன் கேள்விக்கு
என்னிடத்தில்
இனிமேல்
பதில் இல்லையென்று....

அருள் நிலா வாசன்                         .

எப்போது தெரியவரும்..?

பொறுப்புகளை
பொறுக்கி எறிந்துவிட்டு
போகுமிடமெல்லாம்
சோம்பலை
இழுத்துவந்து
சொப்பனத்தில்
மிதக்கும் நீ
எப்போது திருந்துவது..?


கூலிக்கு மாரடிக்கும்
குப்பைக்காரன்
கூட்டி அள்ளும்
கூடியிருந்து
போதையேத்திய
போத்தல்களின்
சத்தத்தில்
பொழுது விடிகிறது
உனக்கு...

மயக்கத்தில் இருக்கும்
என் உயிருக்குள்
நீயிருந்து
ஏக்கத்தைத்
கலந்துவிட்டு
தூக்கத்தில் புரையேறிய
தாக்கத்தின்
காத்திருப்பில்
காலம் கரைவது
உனக்கு
எப்போது
தெரியவரும்..?
நீதானே என்
பொன் வசந்தமென்று....

 அருள் நிலா வாசன்.                                .