ஜாதகத்தைப்
பிரித்து வைத்து ஜனனத்திலிருந்து மரணம்வரை அது என்ன சொல்லுது எண்டு
இடையிடையே கிளி ஜோசியம் கேட்டு அதுக்கும் மேல கைவிரலைத் தொட்டு தொட்டு
இழுத்துப் பார்த்து அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டு எடுத்து
வைக்கும் ஒவ்வொரு அடியையும் அவதானமாக எடுத்து வைத்து., கரடு முரடான மேடும்
பள்ளமும் வருவதே தெரியாமல் வருகின்ற வாழ்க்கையில்
ஏற்றத்தை எதிர் பார்த்துப் படிக்கட்டுகளில் கால் வைக்கும் ஆட்களை விட நான் கொஞ்சம் வித்தியாசமானவர் எண்டுதான் சொல்ல வேண்டும்.
காலம் கொண்டு சென்ற பாதைகளில் அனுபவங்களை பாடமாகக் கற்றுத்
தெளிந்து பயணித்துக் கொண்டிருந்த என் வாழ்க்கையில்., ஒரு திடீர் திருப்பம்
வரப்போவதை எனக்கு முன் கூட்டியே சொல்ல வந்த., என்னை எதிர்பாராத விதமாய்
சந்தித்த முன் பின் அறிமுகமாகாத ஓருவர் என்னைக் கண்ட உடனேயே முகம்
பார்த்துக் குறி சொல்லி என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் என் வாழ்க்கையில்
மறக்க முடியாத ஒரு சம்பவம்.
அந்த ஒரு நாள் மாலை என்னை வாவென்று வருந்தியழைத்தது போன்ற அந்த சம்பவம்.
மதியம் சமைத்துக் கொண்டிருந்த பொழுதே இன்று எப்படியும் இவர்களைப் போய்
நான் பார்த்தேயாக வேண்டுமென்று ஏனோ என் மனம் அப்படித் துடித்தது. சரி
போவோமேயென்று எனது சின்னப் பர்ஸைத் துணையாகக் கூட்டிக் கொண்டு பல நாள்
பழகிய ஒரு வறிய குடும்பத்தைப் பார்க்கவென்று பழகிய பாசம் என்னில் பொங்கி
வழிய நான் இருக்கும் ஊரை விட்டு ஒன்ரரை மணி நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து
போயிருந்தேன்.
என்னைப் போலவே கண்டதும் சந்தோசக்
களிப்பால் குடும்பமே கட்டி அணைத்து வரவேற்று அன்பை என் மீது மாலை
முழுவதுமாக பொழிந்தார்கள். பெண்ணாகப் பிறந்துவிட்டால் பொழுது சாயுமுன்னர்
வீட்டிற்குள் ஒரு பொம்மையாய் இருந்திட வேண்டுமென்ற எண்ணம் என் அடிமனதில்
உறுதியாய் ஊறியிருக்க., இன்னொரு நாள் இதுபோல சந்திக்கலாமென்று அவர்களிடம்
சொன்னாலும் பிரிய மனசின்றி அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான்
என்ன.? என்ன அவரசம்.... என்ன அவசரம் என்ற பாடல் வர பல வருடங்களூக்கு
முன்னரே அப்படி சொல்லிச் சொல்லி என் கையை பிடித்துக் கொண்டே பேசிப் பேசி
வாசல் கதவுவரை என்னோடு குடும்பமே வந்தார்கள்.
நானும் வாசலுக்கு வரவும் அவர்களின் முன் வீட்டுக்காரரும் என்னைக் கண்டவுடன்
ஆஹா...அக்கா எப்பிடி இருக்கிறீங்க என்று என் கையைப் பிடிக்கவும்., என்
பயணம் சற்றுத் தடங்கலாகியது. அதே தெருவில் குடியிருக்கும் நகைக் கடைக்கார
அண்ணனின் மனைவி அந்த வழியாக வந்து ஆஹா எப்ப வந்தீங்க என்று சொல்லிக்கொண்டு
அவ வாங்கி வந்த மரக்கறிக்கூடையை கீழே வைத்துவிட்டு என் கதை கேட்கும்
நேரமிது என்று என் மீது கைப் போட்டு சாய்ந்துகொண்டே கதைத்தார்.
இந்த நொடி., இந்த இதே நொடிதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
எனது நண்பர்களின் வீடு ஒரு தெருவின் கடைசி வீடாக
இருந்தது. அடுத்த தெருவிலிருந்து திடேரென்று இந்தத் தெருவுக்குள் நுழைந்த
ஒரு வயதான வெள்ளைச் சேலை கட்டிய, கருத்த உருவமுள்ள வெளுத்த தலை வயதை
வெறுமனே எடுத்துக்காட்ட ஒரு பொன் நிறமான வேலும் கையில் கொண்டு
சாஸ்திரம்...ம்..ம்...ம்..ம்..ம்.,ம் என்ற குரலோடு அப்பெண்மணி எம்மருகே
நெருங்க.,
முன் வீட்டுத் தாயும் பிள்ளைகளும்
திடீரென்று தமது கதவுக்குள் நுழைந்து கதவை தாழ்பாள் போட்டுக் கொண்டு
மறைந்துவிட்டார்கள்.
வந்த கிழவி என்னைப் பார்த்த அந்தக் கணமே
வார்த்தைகளை வரிசையாகக் கொட்டிக் கொண்டு போனதில் என் இறந்த காலமும்.,
நிகழ்காலமும் வெள்ளைத் துணியில் பச்சைச் சாயத்தைக் கொட்டினால் அது எப்படி
எடுத்துக் காட்டுமோ அப்படி உண்மையாகவே இருக்க
ஒவ்வொரு வரியாக அவர்
வாய் மொழி வந்து காற்றுடன் கலந்து எனக்குள்ளே ஓரு அதிர்ச்சி உணர்வை
ஏற்படுத்தவும் எனக்கு தலை முதல் கால் வரை வியர்க்கத் தொடங்கியது.
அவர் சொன்ன உண்மையான சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல நான் பாசமாக
பார்க்கப் போயிருந்த அந்த ஏழைக் குடும்பத்தினருக்கும் எல்லாமே
தெரிந்திருந்ததனால் அவர்களும் அதிசயப் பட்டார்கள்.
அந்தக்
கிழவியோ இறந்த காலம், நிகழ்காலத்தோடு நிறுத்திவிடாமல் என் எதிர் காலம்
எப்படி எப்போ என்ன நடக்கப் போகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார் என்பதை
நான் உணர நீண்ட நாள் எடுக்காது என்பதை அந்தக் கணம் நான் உணரவேயில்லை.
என் முகத்தில் அப்படி என்னதான் எழுதி இருந்ததோ நான்
அறியேன். முகத்தில் எழுதியிருந்ததைப் படிப்பது போன்று மூச்சே விடாமல்
அத்தனையையும் படித்து முடிப்பது போல கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்
மூன்றையுமே சொல்லி முடித்த பின்னரே அந்தக் கிழவி மூச்சு விட்டார்.
நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து
நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் என்று தழு தழுத்த குரலில் அவரிடம்
கேட்டேன்.
நான் கதிர் காமம் போகும் வழியில் உன்னை நானிங்கு
சந்திக்கிறேன். முனீஸ்வரத்திலிருந்து வருகிறேன். கதிர்காமத்தில் உன்
பெயரில் நான் பூசை வைக்கிறேன். நான் சொன்னது நிஜமாயிருந்தால் நீ......
எனக்கு..... உடுபுடவை வாங்கித் தாவென்று சொல்லி ஒரு வெள்ளைத் துணிக்குள்
சுற்றி வைத்திருந்த ஒரு கடவுள் சிலையை காட்டினார்.
அதைப் பார்த்த அந்த நொடி நான் எப்படி இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு கணம் நான் அமைதியாகினேன்.
எனது சின்னப் பர்ஸை திறந்தேன். அதில் பஸ் காசைத் தவிர பெரிய ஒரு தொகை
நோட்டாகத்தான் ஒரே ஒரு நோட்டு இருந்தது. அந்த வறிய குடும்பத்திடம் இதை
மாற்றித் தர முடியுமா என்று கேட்க என் மனசு தப்பு என்று சொல்லி மனதை
மாற்றிக்கொண்டே சிந்தித்தேன்..
இனி எங்கே நான் இந்த
கிழவியை சந்திக்கப் போகிறேன். இதையே என் காணிக்கையாகக் கொடுத்திடுவோமென
அப்போது எனக்கு அது பெரிய தொகையாக இருந்தாலும் நான் முழு மனதோடு அந்த
கிழவியின் கையில் கொடுக்க எல்லோரும் அந்தக் காட்சியில் அதிசயம் ஆனால் உண்மை
என்று வியந்து போய் நின்றார்கள்.
சில வேண்டுதல்களை
யார் கண்ணிலும் படாமல் நீ செய்ய வேண்டுமென்று ஒரு குறிப்பிட்ட நாள்
கணக்கும் அந்தக் கிழவி எனக்கு சொல்லித் தந்தார். அதன் வழியே நான்
தொடர்ந்தேன். அவர் சொன்னபடியே அந்த நாள் கணக்கில் என் வாழ்க்கையில் அதிரடி
மாற்றங்கள் நடந்து என் வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிப் போட்டது அவர்
சொன்ன வார்த்தைகள் அப்படியே என் வாழ்க்கையோடு பயணித்தது.
சில வருடங்களில் பின்னர்........
நான் எதிர் பாராத விதமாக ஊருக்கு போயிருந்தேன். எனது பிரயாணத்தில்
முக்கிய அம்சமாக முன்னேஸ்வரக் கோயில் விடயம் முக்கிய இடம் பிடித்தது. அவர்
சொன்னது என் நினைவில் உறுத்திக் கொண்டே இருந்ததனால் நான் கோயிலில்
குடியிருக்கும் இறைவனுக்கு உடுபுடவை பழங்கள் தட்டில் எடுத்துக் கொண்டு
பூசைக்கு ஆவலோடு போய் அந்த கிழவியை தேடினேன்.
இறைவன்
காட்சி தருவது எப்போது எங்கு எந்த வடிவத்தில் என்று எமக்குத் தெரிவதில்லை
என்பதை அந்த நாள் அந்த நேரம் நான் உணர்ந்தேன்.
நான் தேடிய அந்தக் கறுத்தக் கிழவியை நான் பார்க்கவேயில்லை.....
அதிசயம் ஆனால்........உண்மை.... .
.
04.02.2016