Sunday, 30 August 2015

தலையெழுத்து மாறியதை

பிரித்துப் பார்க்கையில
சிரிப்புத்தான் வந்தது
பிரியா வரம்கேட்டுப்
பிரியமுடன்  நீ
இன்று.....

யாருமில்லா நேரம்
ஊருக்குள்ள வந்திறங்க
எங்கிருந்து வந்தது
இன்று
இந்த வீரம்

வேர்விட்ட நம்உறவு
வெறும் 
கதையாகிப்
போகுமென்று
ஊர் பெயர்
சொல்லாத
சாத்திரியும்
சொல்லவில்லை....

மேஸ்திரியைக் கட்டி
நானும் கல்லரிந்து
கணக்குப் பார்த்து
மேலும் கீழும்
வீடுகட்ட
மெல்ல நடை
போட்டுக்கொண்டு
காலம்தான் நீழும்
என்று
கணக்கர் வந்து
சொன்னபோதும்
காதில் நான்
விழுத்தவில்லை....

சொல்லாமல்
ஊரைவிட்டே
சுயநலமாய்
போனதுதான்
நீ செய்த 
மாகுற்றம்
இனியென்ன
வரக்கூடும்
என் பெயரில்
மாற்றம்.....

முற்றுப் புள்ளி
வைக்க
முன்னர்
முடிவாக 
நீயெழுதிய
மூன்றே வரிகள்
முழுசாகப் படிக்கு
முன்னர்
நனைந்தே கிழிந்தது
கண்ணீரில் கடிதம்...

கண்டபடி எழுதாதே
வார்த்தைகள் கவனம்

தலையெழுத்து
மாறியதை
இன்று
என் கையெழுத்து
சொல்லும்
இனியென்னை
தினமும்
உன் நினைவே
கொல்லும்.....

அருள் நிலா வாசன்           

Sunday, 23 August 2015

குலை என்ன விலை


குலை என்ன
விலை என்று
கேட்டு
நான்
விசாரிக்க


சீப்பா
வேணுமோ
என்று
அவன்
கொஞ்சம்
விவரமாய்
கேட்க

குலையை
சீப்பா
தாவென்று
நான்
விடுத்து
கேட்க

வில்லங்கம்
பிடிச்ச
வியாபாரமென்று
அவன்
குலை குலை
என்று
குலைத்து
விலை சொல்லாமலே
என்னை
விரட்டி
அடிக்க

தலை தப்பினால்
தம்பிரான்
புண்ணியம்
என்று
வாங்காமலே
வந்த
வாழைப்பழ
குலை..............
.

                                 

இழுத்துப் பூட்டிய ஆமைப் பூட்டு...

எல்லையில
கல்லுமதில்
எடுத்தெறிஞ்சு
சொல்லும் பதில்
ஏறிக் குதித்து
வந்தாலும்
அதிரடியாய் 
இங்கு
அதி உயர்
பாதுகாப்பு..

 கோடை வெய்யில்
வாடைக்காற்று
கொட்டுமழையில்
வெட்டும் கீற்று
கிட்ட வந்து
தாக்காமல்
தப்பிப் பிழைத்துக்
தரமாய் பழுக்க
தனியாய் தொங்கும்
பலாக்காய்..

முள்ளு விரிந்து
முழுசாய் கனிந்து
பலமாய் வாசம்
மூக்கு நுனியில்
முட்டுமுன்னர்
முற்பாதுகாப்பென்று
கொழுந்து விட்ட
அறிவில் நனைந்து
இழுத்துப் பூட்டிய
ஆமைப் பூட்டு...

இரும்புத் தூணுக்குத்
துணையாய்
இறுதிவரைக்கும்
பூட்டும் திறப்பும்
கூட்டுச் சேர்ந்து
பலமாய்
இருக்கும்

ஆனால்..

பலா...பழக்
காப்புறுதியில்
எத்தனை நாளுக்கு
என்னதான்
உத்தரவாதம்..?
                                   

Saturday, 22 August 2015

இன்னும் என்ன பார்க்கிறாய்

தூக்கம் கலைந்த
இரவொன்றில்
என்னையே
இரகசியமாய்
பார்த்துக் கொண்டிருந்தது
இருட்டிலிருந்த
சுவர் கடிகாரம்....

ஏதும் வெளிப்படையாக
இல்லாமல்
எதையோ பறிகொடுத்தது
போல
எனக்குள்
உருகிக் கொண்டிருந்தது
எனையே
சிறைபிடித்த
உனதுள்ளம்.....

பாடாய் படுத்தும்
இரவில் பெய்த
சொட்டும் மழையின்
பட்டுத் தூறல்கள்
சொட்டுச் சொட்டாய்
தகரத்தில் விழுந்து

நீ தட்டுவது போல்
மெட்டுப் போட்டு
மெல்லத் திறந்த
கதவு
என்னை மென்று
விழுங்கியது
உன் நினைவின்
கீறல்கள்...

இன்னும் என்ன 
பார்க்கிறாய்
கடி.....காரமே
நான் குடிவந்து
இத்தனை
நாழிக்குப்பின்

முடிந்து போன
கதைக்கு 
முற்று புள்ளிவைக்க
நீ மட்டும் தானே
இப்போதைக்கு
எனக்கு துணை...

சத்தம் போடாதே
நான் கொஞ்சம்
தூங்க வேண்டும்..

இழுத்துப் போர்த்தேன்
இறுகிய மனதை
ஒரு இரவு 
இன்னொரு பகல்
இவ்வுலகத்தையே
மறந்தேன்
இன்னொரு
நாளுக்காய்
பொழுது விடிந்ததே
தெரியாமல்....

அருள் நிலா வாசன்
23.08.2015
                                                       

Tuesday, 18 August 2015

அன்றொரு நாள் என்னோடு

உத்தரவாதம் இல்லாமல்
நீ கொடுத்த
நம்பிக்கையை
கழுதத்தில்
தொங்கவிட்டு
ஊரூராய்
அலைந்தேன் நான்.
 பிடிவாதம் உன்னை
இழுத்துப் பிடித்து
வைத்த பின்னும்
அடி தாங்க முடியாமல்
ஒரு படியேறி
உன் வழிக்கு வந்து
தொலைந்தேன் நான்.

சாகாவரம் கேட்ட
உருவமில்லாக் காதலுக்கு
உயிர் கொடுத்தவன்
நீ எங்கிருந்த போதும்
உருகிவிட்ட
என் உள்ளம்
உருவிழந்து போகும்
முன்னர்
திரும்பி வருவாய் என....

கரைதொட்டுத் திரும்பும்
அலையே
உன் நுரைபட்டு அரும்பும்
அழகான நீர் துளிகள்
என் கால்தொட்டு
உடைந்த போது
உணருகின்றேன்...

அன்றொரு நாள் என்னோடு
இங்கிருந்த
உன்
இருபாதச் சுவடுகள்
இன்னும்
உயிரோடுதானென்று.....

18.08.2015                     

Thursday, 6 August 2015

உன்னை மட்டும் நீ நம்பு

எழுந்து நடந்த
காற்றைக் கேட்டேன்
எங்கே போகிறாய்
என்று
சொல்லத்தான்
நினைக்கிறேன்
என்றது.....

மலர்ந்து சிரித்த
பூவினைக் கேட்டேன்
எதற்கு சிரித்தாய்
என்று
காற்றுக்கென்ன 
வேலியென்று
பூவும் காற்றும்
சேர்ந்தே
அங்கும் இங்கும்
அசைந்தது....

மூடிக்கொண்டிருந்த
மேகத்தைக் கேட்டேன்
எதற்கு
இழுத்து மூடுகிறாய்
என்று
அது பூமிக்கும்
எனக்குமிடையில்
இரகசிய ஒப்பந்தம்
என்று
சொல்லிக்கொண்டிருக்க
இடையில்
குறுக்கிட்ட
இடியும் மின்னலும்
போட்ட சண்டையில்
ஈரமாகியது
நிலம்.....

சலனமின்றி
சாத்தியமாய்
அங்கும் இங்கும்
பறந்த
பட்டாம் பூச்சியைக்
கேட்டேன்
எப்படி உன்னால்மட்டும் 
இப்படி முடிகிறது
என்று
அமைதிக்கு பெயர்தான்
சாந்தி என்றது...

சித்திரமாய்
சீமெந்தில்
சோக்காய்
சொப்பனத்தில்
தனியாக
தவழ்ந்த
என் கால்களைத்
தவணை முறையில்
பார்த்தேன்..

உன்னை மட்டும்
நீ நம்பு
நான் உன்னோடு
வருவேனென்று
உறுதியாய்
சொன்னது

அருள் நிலா வாசன்
6.08.2015                          .