அருள் நிலா வாசன்

விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்

Tuesday, 22 December 2015

போகட்டும் விட்டுவிடு...

முயற்சியால் முன்னுக்கு
வந்த மூத்தவன்
ஒரு முழம் கயிற்றுக்கு
என் முடிச்சிலிருந்து
உருவி எடுக்கவில்லை


என் முழு நேர உழைப்பு
மூன்றேக்கர் நிலத்தை
மூன்று விரல் மடித்து
முத்திரையில் வையென்ற
என் கையெழுத்தை
வாங்க
முன்னும் பின்னும்
ஒட்டிக் கொண்டிருந்த
மூச்சிரைக்க நீ பெத்த
இளையவனின்
முகத்தை
இருட்டில் கூட
பின்னர்
பார்க்கவும் கிடைக்கவில்லை

போகட்டும் விட்டுவிடு

உனக்கு நானும் எனக்கு நீயும்
பசி வந்தால் ருசியாக
வென்னீரும் சோறும்
வேரேன இருக்கும்
வெள்ளையம்மா நீயும்
எனக்கு வேறென்ன வேணும்...

அருள் நிலா வாசன்
23.12.2015
Posted by அருள்நிலா வாசன் at 16:32 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

கூடு திரும்ப.....

கூட்டை விட்டுத்
தூரமாய்ப் பறந்த
கூண்டுப் பறவைகள் கூட
குமுறிக் குமுறி
அழும் சத்தம்
கொஞ்சமாய்
கேட்கிறது....


தோட்ட வெளியெங்கும்
பாடித் திரிந்த
குயில்களின்
தேசியப் பாடல்
எங்கோ
தெளிவில்லாமல்
தூரமாய் கேட்கிறது....

நெல் மணிகளைத்
கொத்தித் திரிந்த
புலுனிக் கூட்டம்
கடந்த காலத்தைக்
கனவாய் மறந்தா
வயல்களும்
வனப்பும்
எங்கே போனதென்று
ஏக்கமாய்க் கேட்கிறது..

வேம்பாய்க் கசக்கும்
வெடிகுண்டுச் சத்தங்கள்
கேட்கப் பயந்த
தோகை மயில்கள்
ஊருக்குள் திரும்பி
வரலாமா என்று
தொலைவாய் நின்று
கேட்கிறது.....

நரியும் பரியும்
நாட்டைக் கெடுத்தாலும்
கேள்விக் குறிகளின்
பதில்கள்
எல்லையைக்
குறிக்க
தம்பட்டம்
தானாய்
அடங்கும்
அவர்கள்
அவர்களாகவும்
நாங்கள்
நாங்களாகவும்
இருக்க
இயற்கை
இயல்பாய் வரும்...

அருள் நிலா வாசன்.
22.12.2015                                           .

Posted by அருள்நிலா வாசன் at 16:27 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

காத்திருந்து கடைசியில்

எதிர் எதிராய்
நாம்
அமர்ந்திருந்த
ஏகாந்தப்
பொழுதுகளில்
எமக்கிடையில்
ஒழிந்திருந்த
எத்தனையோ
விடயங்கள்
இரகசியமாய்
எழுந்து
நீளக்கால் வைத்து
எட்டிக் கடந்தே
போனது...


இடைவெளியில்
என் வழியில்
ஒரு வழியாய்
குறுக்கிட்ட
அந்தப்
பொல்லாத
வியாதியில்

இப்படித்தான்
இருக்குமென்று
என் தப்பாத
கணக்கில் நின்று
நான்
இறுக்கிப் பிடித்த
கணத்தில்
இம்சை
தாங்காமல்
கழன்று விழுந்த
அந்த முகத்தை
பார்க்கவே
சகிக்கவில்லை....

ஒற்றைப் பத்திரத்தில்
இரட்டைக் கையெழுத்து
எப்போது விழுமென்று
காத்திருந்த
கலியாணம்
எங்கள்
கண்ணில்
தெரியாமலே
கும்மிருட்டில்
ஓடியே போனது....

காத்திருந்து
கடைசியில்
உன்னைக்
கடந்து போன
வண்டிக்கு
கை நீட்டி
உன்
பயணத்தை
உல்லாசமாய்
தொடர்ந்தாலும்...

உன்னைக்
கண்டிஷன் போட்ட
காதல் மீது நீ
பெட்டிசம் போட்டாலும்
அந்த கண்ணீரில்
கரைந்து போன
காதலுக்கும்
உன் முகமூடிக்
காதல்
தெரியாமல்
இல்லை....

இதுவும் உன்னைக்
கடந்து
போகும்
மெதுவாகப் போ
வழுக்கி விழுந்திடுவாய்..

அருள் நிலா வாசன்.

22.12.2015






Posted by அருள்நிலா வாசன் at 16:08 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Sunday, 13 December 2015

போதை தெளிந்த பின்...

உன் போதை தெளிந்து
புனித நாளொன்று
புதிதாய் பிறக்க
வாசல் திறந்து
உனக்காய்
ஒளி கொடுத்து
எரிந்து முடியும்
இந்த மெழுகுவர்த்தியின்
கடைசி மூச்சுக்குள்
என் கடைசி ஆசை
ஒழிந்து இருக்கிறது
உனக்கு தெரியாமல்
இருக்கலாம்....


என் காதைப் பிளிந்து
உன் கவனத்தில்
கடைந்தெடுக்கும்
சில்லறை
வார்த்தைக்குள்
வாளொன்று
இல்லாமல்
வெட்டும்
உன் வாய் பேச்சில்
கல்லறைக்குள்
அடங்கத் துடிக்கும்
என் சுவாசக் காற்று...


பூங்கோதைக்குள் ஒளிந்து
நீ வெளிச்சங்களை
இழுத்து மூடி
வெட்கத்தை
களட்டித் தூர
எறிந்துவிட்டு
வெறி கொள்ளும்
உன்
வழித்தடங்கள்

என்னை
நின்று
நெறிப்படுத்துகிறது..


கரைதொட்டு உடையும்
நீர் குமிழிகளாய்
என் இதயத்தின்
விழிம்பில்
உன் நினைவுப் பூக்கள்
மௌனத்தில்
விளையாடுகிறது...


ஊற்றாகி வழிந்து
ஓடும் உன் இசையாற்றில்
இன்னும் நான் வீழ்ந்து
கிடக்கின்றேன்
பாடும் நிலாவின்
நீழும் ஒளி காண
உன் பார்வை ஓரு நாளில்
மறுபடியும்
நின்மதியைத்
தேடி வரலாம்
உன் போதை
நிரந்தரமாய் தெளிந்த பின்...


அருள் நிலா வாசன்.
13.12.2015                                             

      



Posted by அருள்நிலா வாசன் at 14:07 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Thursday, 10 December 2015

காற்றுக்குத் தூதுவிட்டேன்

வாச மல்லிகையை
வளவெங்கும்
நட்டு வைத்து
அது நித்தியமாய்
என் தலையில்
மொட்டோடு
பூத்திருக்க.....


நித்தமும் உன்
பாட்டாகி
உன்பாச வலையில்
விழுந்திருக்க
வயல்
வரம்பெல்லாம்
வளர்ந்திருந்த
புல் நுனியில்
உரம் போட்ட
கையாலே
நீ தொட்டு
உரசியதால்
வழிந்தோடிய
ஸ்வரங்களுக்கு
வரிசையாய் நின்று
நடனமாடிய
நெல்லும் மணியும்...


மஞ்சலிட்ட பத்திரிகையில்
உன் பெயருக்குப்
பின்னாலே
என் பெயரும்
பதிந்ததென்று
ஊரெல்லாம்
பாடத்தான்
காற்றுக்குத்
தூதுவிட்டேன்
நீ வந்து
நிக்கிறியே..?

உன் காதுக்கு
விருந்தான
பூங்காற்றின்
நேரலைகள்
அப்படி
என்னதான்
சொன்னதோ..?

அருள் நிலா வாசன்
10.12.2015                                                           

Posted by அருள்நிலா வாசன் at 17:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Wednesday, 2 December 2015

விடியாத தேசத்தின் முடியாத சோகம்......

நீண்ட அமைதிக்குப் பின்
அப்படி ஒரு அவலம்
நிமிர்ந்து பார்க்குமுன்
நிலத்தில் விழுந்தாள்
மூச்சு அடங்கி
மீண்டும் எழுந்தாள்

முகமெல்லாம் காயம்
இரத்தக் கசிவில்
ஆடை சிவந்தது
ஆவென்று திறந்திருந்த
கதவின் வழியாக
அவளின் நிம்மதி
அவசரமாய்
வெளியேறியது

போன உயிரைத்
துரத்திப் பிடித்தவள்
தூக்கில் தொங்கவும்
துணிந்தாள்

ஆனாலும்
முடியவில்லை

குறுக்கே தடுக்க
வந்த
குற்ற உணர்வை
இழுத்து வைத்து
குலுங்கிக் குலுங்கி
அழுதாள்

கூடவே இருந்த
விடுதலையுணர்வை
குறி வைத்துச்
சுட்டாள்
குலைத்துக் கொண்டிருந்த
நாய்

முட்டாள்
ஆனதுபோல்
கிட்ட வந்து நின்று
அமைதி காத்தது

விடியாத தேசத்தை
விடுவிக்கப்
போனவள்
விதையொன்றைச்
சுமக்கின்றாள்

அழித்து எழுத
முடியாமல்
அழுத்தி எழுதிய
தாய்மொழி
தெரியாத
அந்தச் சின்னக்
கவிதை
சொல்லப் போகும்
அவளின்
சோக வரலாறு..
.

.
அருள் நிலா வாசன்
2.12.2015                                .


Posted by அருள்நிலா வாசன் at 06:03 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Friday, 30 October 2015

மண் இருக்கும்வரை

உட்கார்ந்த இடத்திலிருந்தே
சிந்தனைச் சிதறல்களை
உலகமெங்கும்
அள்ளித் தெழித்து
மொழி தெரியாத
மோடனுக்கும்
வழியைத் தெளிவாக்கும்
மெட்டுக்குப் பாட்டை
வரி வரியாய் பொழிந்து
வரலாறு படைத்த
வள்ளலே


பொங்கு தமிழில்
சங்கு முழங்க
நெஞ்சின் ஈரத்தை
வீரமாய்
நெகிழ வைத்து
எழுத்தில் வடித்த
முள்ளு வேலியின்
வரலாற்று
வலியுணரந்த
வாலியே

மீண்டும் மீண்டும்
கரை தொடும்
அலைபோல
காதுச் சுவர்களை
மீட்டிச் செல்லும்
ஒவ்வொரு
பாடல் வரிகளும்
காலத்துக்கும்
அழியாத கோலங்களாய்
மண் இருக்கும்வரை
பதிந்திருக்கும்.......
30.10.2015                               

Posted by அருள்நிலா வாசன் at 07:02 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Friday, 16 October 2015

சயிக்கிள் செயின்

 அதிகாலை நேரம் அலாரம் அடிக்க முன்னரே அவள் எழுந்து உட்கார்ந்தபடி சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் நாலுமணியை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. படுத்த பாயைச் சுருட்டி பக்கத்து அறையில் வைத்துவிட்டு., படக்குப் படக்கென்று நடக்க வேண்டியவைகளை எல்லாம் நல்லபடி நடத்திவிட்டு, அம்மா காய்ச்சி வைச்ச ஆட்டுப் பாலில் போட்ட அண்ணா கோப்பியை., ஊத்தி ஆத்தாமல் ஊதி ஊதி குடிச்சுப் போட்டு மறுபடியும் நேரத்தைச் சரி பார்த்தாள். தேங்காய் திருவ இப்ப நேரம் போதாது. போயிட்டு வந்தும் திருவலாம் தானே.

சந்திக்குச் சந்தி நின்று சங்கதிகள் தாங்கிவரும் இரட்டைத் தட்டு ஸ்கூல் பஸ்ஸின் இரைச்சல் சத்தம் கேட்குமுன்னர்., அம்மாவையும் தேங்காய் பாதியையும் எப்படியும் சமாளிக்காலாமென்று....

தேங்காயைப் பாதியை நினைவுக்குள் பதிந்துவிட்டு உயிரியல் பாடத்தின் வீட்டு வேலைக் கொப்பியை மறக்காமலே எடுத்து தோள் பையிற்குள் வைத்தாள். இன்று கண் பற்றி பாடம் நடத்துவதாக சொல்லியிருந்தார். கண்ணுக்குள் நூறு நிலவு எப்படித் தெரியும் என்று சொல்லித் தரப்போகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை அவளுக்குள் ஓர் சிந்தனைச் சில்லெடுப்பு.

நேற்றடித்த காற்று பின்சில்லில் இறங்காமல் இருக்கிறதா ஒரு தடவை அமுக்கிப் பார்த்தாள். அது நிற்கச் சொன்ன இடத்தில் அப்படியே நின்றது. சயிக்கிள் ஸ்டாண்டைத் தட்டிவிட்டு வீட்டின் முன் கதவைத் திறந்தாள். ரோட்டில் எரிந்துகொண்டிருந்த நூறு வால்ட் மின்குமிழ் நம்பிக்கையோடு எரிய., அவளுக்கு எப்பவுமே குளிருக்கு வரும் தும்மலைத் தூக்கி எறிஞ்சு போட்டு....


                                                                
                                                                           .
தும்பிக்கையானைத் துணைக்கு இழுத்துக் கொண்டு நிமிர்ந்து ரோட்டைப் பார்த்தாள். மதிலுக்கு மேலால ஒரு ஆணின் தலை ஊருவது தெரிந்தது. உற்றுப் பார்த்தாள். அவள் வீட்டு தகரப் படலைக்கு மேலால் அந்தத் தலை தெளிவாகத் தெரிந்தது. அவரே தான். அது வாத்தியார்தான்.

அவருக்கும் அவளுக்கும் வயதளவில் பெரிதாக இடைவெளி இருக்கவில்லை. நாலைந்து வருடங்கள்தான் இடையில் ஓடிக்கொண்டிருந்தது.

வீட்டுக்கு வெளியே வந்தவள்., கெந்திக் கெந்தி ஏறிக் குந்திக் கொண்டாள் அவள் தன்னுடைய சயிக்கிளில். அவரோடு போனால் இருட்டுக்குப் பயமில்லாமல் சேர்ந்தே போயிடலாம். உன்னி மிதித்தாள். சற்றே நிமிடத்தில் அவள் சமாந்தரமாய் பயணிக்கத் தொடங்க திரும்பிப் பார்த்த வாத்தியார். அவர் குரலில் குளிர் ஒட்டிக் கொண்டிருக்க ``குட் மோர்னிங்’’ என்றார். குட் மோர்னிங் சேர்...இன்று ஈவினிங் கிளாஸ் இருக்கிறதா? கணக்குப் பாடத்தில் போன வாரம் விட்டதையெல்லாம் இன்று எட்டிப் பிடித்து விடவேண்டுமென்ற ஓரு துடிப்புடன் அவள் கேட்டாள்.

ஓ....பயணமெல்லாம் எப்பிடிச் போச்சுது எப்ப திரும்பி வந்தனீர்.? கணக்குப் பாடத்தில் வீட்டு வேலை கொஞ்சம் குடுத்தனான். ஆனால் இன்று ஈவினிங் கிளாஸைக் கான்சல் பண்ணிவிட்டேன். அடுத்த வியாழக்கிழமைக்கு இதே நேரம் ஹோம் வேர்க்கெல்லாம் கவர் பண்ணிக்கொண்டு வாருமென்ன.?

ஓம் சேர்... ஒரு வாத்தியாருக்கு கொடுக்கின்ற மரியாதை அவளுக்குள்ளே ஒட்டிக்கொண்டிருந்தது.

மூன்று ரோட்டு சந்திக்க முத்தையா கடையிருக்கும் முச்சந்தி வந்தது. முறையாக வழிவிட்டு முறைப்படி திரும்பினோம். இன்னொரு சைக்கிள் கிரீச்சிட்டு ஒரு பிரேக் போட்டு ஃபிலிம் காட்டி., அவளை முந்திக் கொண்டு, வயதுக்கு வந்து விட்டதாய் வயதுக் கோளாறை அவளிடத்தில் காட்டிவிட்டுப் போனான்., சக வகுப்பு மாணவன் பாரதி.

வாத்தியார் அவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். அவளும் அவரைப் பார்த்து திரும்பவும் ரோட்டைப் பார்த்தாள், பக்கத்தில் வந்துகொண்டிருந்த கிடுகு வண்டிலுக்குள் அவள் சயிக்கிளோடு சுழன்று விளாமல் நிதானித்துக் கொண்டாள்.

வாத்தியாரின் மனதில் என்ன புகைந்ததோ அவளுக்குத் தெரியாது. மாசி மாதம் மூசிப் பெய்த முன்பனியில் மூச்சுக்கு மூச்சு அவர் புகைக்காமலே அவர் வாயால் புகை தள்ளிக்கொண்டிருக்க, அந்த சில நிமிடங்கள் மௌனத்தில் நகர்ந்தன. மின்னிக்கொண்டு போனவன் மின்னாமல் முழங்காமல் டியூட்டரி வாசலில் சிரிப்பை சிதற விட்டு நின்று கொண்டிருந்தான் பாரதி.

அப்படியென்ன அவசரம் முச்சந்தியில் உமக்கு வாத்தியார் அவனிடம் கேட்டார். ஒண்டுமில்லை சேர்....அவன் ஒற்றைக் கண்ணால் அவளை ஓரமாய் பார்த்தான். அவள் நெஞ்சுக்குள் நடுங்கக் கீழே பார்த்தாள்.

உயிரியல் பாடம் உயிரோட்டமாய் நகர்ந்தது. அடுத்த வகுப்பில் தீர்வுகளுடன் சந்திப்போம்.. எல்லோரும் பாடப் புத்தகங்களுடன் எழுந்து நகரத் தொடங்க., ``கஸ்தூரி கொஞ்சம் நில்லும்” வாத்தியாரின் குரல் அவளை நெருங்க அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வீட்டு வேலை கொஞ்சம் தர வேண்டும். (வாத்தியார் கணக்கைச் சொன்னார்). ஓம் சேர்..கஸ்தூரி கனிவோடு அழைத்தாள். வாத்தியார் அவளிடம் கொப்பியை கொடுத்தபடி கொடுப்புக்குள் சிரித்தார்.

வாத்தியாருக்கு என்ன ஆச்சு.? ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு. ``போயிட்டு வாறன் சேர்’’வீட்டில் தேங்காய் பாதி., அவளை வில்லங்கமாய் இழுத்துக் கொண்டுவந்து வீதியில் விட்டது.

வாரமொன்று விரைந்தே பறந்தது. கணக்கு வகுப்புக்கு காலையில் எழுந்து கரெக்டாக நாலரைக்கு தன் வீட்டுத் தகரப் படலையைச் சத்தமின்றித் திறந்தாள். பக்கத்து வீட்டுக்கு நேரே முன்னால்., சில்லென்ற காற்றில் சிணுங்கிக் கொண்டிருந்தது மழை. ஈசல்களுக்கு நடுவில்., மின்னிக்கொண்டிருந்த மின் கம்பத்தின் வெளிச்சத்தில் யாரோ ஒருவன் சயிக்கிளால் இறங்கி நின்று செயினுக்குள் கையை விட்டு சரி பிழை பார்த்துக் கொண்டிருந்தான்.

கஸ்தூரி கெந்திக் கெந்தி ஏறிக் குந்திக்கொண்டாள் சயிக்கிளில். இருட்டில் இன்று தனியான பயணம் பயந்தபடியே கிளம்பினாள். நாலு வீடுகள் தாண்டிப் போகுமுன்னர் இன்னொரு சைக்கிள் அவள் பக்கத்தில் துணையாக வந்தது. அது வேறு யாருமில்லை. அதே வயசுக்கு வந்த அதே வகுப்பு மாணவன் பாரதி.

முத்தைய்யா கடையிருக்கும் முச்சந்தி வர முதலே மூன்றாவது சயிக்கிள் இவர்களை முந்திக் கொண்டு போனது. அட வாத்தியார் இண்டைக்கு பிந்திப் போனாரோ.? இப்படி அவசரமாய்...? இல்லையே இண்டைக்கு எங்களுக்குத்தானே இவர் வகுப்பு எடுக்கிறார்? இப்ப என்ன அவசரம். நாங்கள் ஆறுதலாய் போவம்.
பாரதி சொன்னான். அதைக் கேட்ட கஸ்தூரி அவதானமாய் சயிக்கிளை அதே வேகத்தில் ஓடிக்கொண்டு சென்றாள்.

கார் ஒன்று வந்து கடுகதியாய் நின்றது. தன்னையறியாமல் அவளும் பிரேக்கை பிடித்தாள். பாரதியின் சையிக்கிள் முன்னுக்கு போக அவள் கொஞ்சம் பின்னாடி போய் டியூட்டரியில் சேர்ந்தார்கள்.

கணக்கு வகுப்பு முடிந்தபின் வாத்தியார் உயர்த்திய குரலில் `` ஒரு அறிவித்தல் எல்லோரும் கவனமாய் கேழுங்கோ. பின்னேரம் பௌதீக வகுப்பு இருக்கு. அவசரமாய் பாடத்திட்டம் முடிக்க வேண்டியிருக்கு. எல்லாரும் தவறாமல் வகுப்புக்கு வரவும். வாத்தியாரின் முகத்தில் கொஞ்சம் கடுமை ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்த தலை நிமிராமல் கஸ்தூரி வகுப்பை விட்டு வெளியேறினாள். குறுக்கே வந்து தடுத்த வாத்தியார்., கணக்கில் கொஞ்சம் பிழைகளிருக்கு. பின்னேரம் வகுப்பிற்கு கொஞ்சம் முன்னதாக வாரும் டவுட்டை நான் கிளியர் பண்ணுறேன். சரியா...

நான் அப்படியென்ன கணக்கில் பிழை விட்டேனோ..? ஹ்ம்ம். பின்னேரம் நேரத்தோட வந்தால் தெரிஞ்சிடப் போகுது...அதுக்குப்போய் இப்ப எதுக்கு நான் டென்ஷன் ஆக வேண்டும். அவள் அப்படித்தான் எண்ணிக்கொண்டாள்.

ஓம் ..... சேர்.... அவள் மெல்ல நகர்ந்தாள். மேனி லேசாகப் பட படத்தது. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. பாடலை வாத்தியார் பாடியது போல் உள்ளூர உலுக்கி விட்ட ஒரு பிரமை அவளுக்குள் ஊர்ந்தது. இரட்டை வேகத்தில் இருக்கையைத் தள்ளினாள். கதிரை பின்னோக்கி பிரண்டு விழுந்தது. புத்தகங்களை எடுத்தபடி பின்னோக்கி நடந்த கஸ்தூரி

பின்னேரம் தவறாமல் வகுப்புக்கு வருகிறேன். போயிட்டு வாறேன் சேர்..ர்.

பள்ளிவிட்டு வந்ததும் பரப்பாய் புறப்பட்டாள். எங்க வெளிக்கிடுறாய்.. இவ்வளவு அவசரமாய்? ``இண்டைக்கு எக்ஸ்ரா கிளாஸ் இருக்காமென்று ஏகாம்பரம் மாஸ்டர் காலையில் சொன்னவர்’’. அது தான் போகிறேன்.. அதுக்கு சாப்பிடாமல் போறியா... அம்மா அன்பை அள்ளி கொட்டினாள். கதவை இழுத்து இறுக்கிச் சாத்தியபடி கணக்கில ஏதோ பிழையிருக்காம்.. அதை முதலில திருத்தோணும்..

அரிசிப் புட்டுக்கு நெத்தலி மீன் போட்டு நல்ல சொதி வையம்மா
நான் போட்டு வாறன்’’...புறப்பட்டாள் கஸ்தூரி வேகமாக.

வாத்தியார் அவளுக்காக வாசலிலேயே காத்து நின்றார்.
சயிக்கிளை அப்பிடியே ஓரமாய் சாத்தி வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள். உள்ள வாரும். உம்மோட கொஞ்சம் கதைக்கோணும். உதறியது அவளுக்கு. உயிரோட திரும்பிப் போவேனா என்பதுபோல்...விக்கி விக்கி அடித்தது வீக்காய் போன அவளின் இதயம்....

வாரும்..... கஸ்தூரி இப்பிடி இரும். என்ன சேர்..? கணக்கில ஏதோ பிழை இருக்கெண்டு சொன்னீங்கள். என்னுடைய கொப்பி எங்க.? கொப்பியொண்டும் இப்ப தேவை இல்லை. நான் கேக்கிற கேள்விக்கு சுத்தி வளைக்காமல் பதில் சொல்லும். உமக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு..?

அவரின் குரலில் குமுறிக்கொண்டு வந்த வார்த்தை அவளை ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது. எவனுக்கும்.?...... எனக்கும்..?

என்ன தொடர்போ....சேர்...ர்..ர்..? என்ன சேர் சொல்லுறீங்கள்.?

அவன் தான் சயிக்கிள் செயின்......
சயிக்கிள் செயினோ..? என்ன சேர் சொல்லுறீங்கள். எனக்கொன்றும் விளங்கேல்ல. கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்கோவன் சேர்.. அவளின் குரல் தள தளத்தது.

உண்மையைச் சொல்லும். இது எனக்கும் உமக்கும் இடையிலான அவசர மீட்டிங்..

இதில என்ன உண்மை. எது பொய்.. எனக்கு ஒன்றுமே புரியேல்ல... தலை சுற்றுற மாதிரி இருந்தது அவளுக்கு. .

அதென்ன அவருக்கு ஒவ்வொரு நாளும் அதே இடத்தில அதே நேரம் சயிக்கிள் செயின் களருது.? வாத்தியாரின் கண்கள் சிவந்தே இருந்தது. ``எனக்கொன்றும் தெரியாது சேர்.

அன்று ஒரு நாள் காலையில் நான் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது... ரோட்டு லைட்டுக்கு கீழே இருந்து யாரோ சயிக்கிள் திருத்தின மாதிரி இருந்தது. . நான் யாரென்று கவனிக்கவே இல்லை. கொஞ்ச நேரத்தால என் சயிக்கிளுக்கு பக்கத்தால ஓவர் டேக் பண்ணாமல் என்னுடன் வந்த போதுதான் நான் அவனைக் கண்டேன். யாருமில்லா அந்த நேரம் ரோட்டெல்லாம் இருட்டாய் வேற இருந்ததனால் நான் சேர்ந்தே வந்தது உண்மைதான்.

இதைத் தவிர வேற எந்த உண்மையும் எனக்கு தெரியாது’’..

அவள் இருந்த மேசையை விட்டு ஒரு வேகத்தோடு எழுந்து அனுமதி கேட்காமலே வெளியே வரவும் பாரதி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வாத்தியார் பாரதியைக் கேள்வி கேட்டாரா....இல்லையா..? அது அவளுக்குத் தெரியாது.....ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தே துவைத்தார். அடி விழுந்த சத்தத்தில் அவள் விம்மி விம்மி அழுதாள். பலமாய் விழுந்த அடியால் அவனுக்கு பத்துப் போடுமளவுக்கு நொந்திருக்குமே என்றல்ல. இதுவரைக்கும் தூங்கிக் கொண்டிருந்த அவளின் மனம் தூக்கில் தொங்கியதால்......

முக்கோணக் காதல் ஒரு முடிவுக்கு வருவதேயில்லை.....

அருள் நிலா வாசன்.
17.10.2015


Posted by அருள்நிலா வாசன் at 18:56 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சிறு கதை

Monday, 12 October 2015

எதிர் வீட்டு யன்னல்

நான் வீடு வந்து சேர்ந்த போது....

பூட்டியே கிடக்கிறது எதிர் வீட்டு யன்னல். ஏனென்று தெரியவில்லை. புத்தகங்களெல்லாம் புழுதி படிந்து கிடக்கிறது. முற்றத்தில் விழுந்த முல்லைப் பூக்களில் அவள் சுவாசம் ஒட்டிக்கொண்டிருக்க முட்டிக் கொள்ளும் மேகக் கூட்டம் முனகிக் கொண்டிருந்தது. இருட்டு இழுத்து மூடிக் கொண்டு இன்னும் என்னென்னவோ தேடிக் கொண்டிருந்தது.??

வேலை இடத்திலிருந்து ஷோட் லீவு போட்டு வீட்டுக்கு புறப்பட்ட நான்..ஒத்திகையில் இறங்குகின்றேன். இன்று வெள்ளிக்கிழமை., எப்படியும் நான் சொல்லுவதாக எடுத்த முடிவை இனியும் தாமதிக்க முடியாது.
 
சடன் பிரேக் போட்ட சைக்கிள் சத்தம் என் காலடியில் அவளா சொன்னாள்! அவசரமாக வந்த ரங்கன் என்னைக் கேட்டது
இப்பவும் என் மூளைக்குள் ஓரு மூலையில் இறுக்கிக் கொண்டிருந்தது.

அப்படியொன்றும் இருக்காது. இது என்னை நானே சமாளிக்க எனக்குள் ஒரு பிரமை.

மேலும் என் அடி நெஞ்சில் ஒரு பட படப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதுவரைக்கும் நான் சொல்லாத விடயத்தை இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள் புவனா. ஒத்திகை பார்க்கிறது விட்டு விட்டுத் துடித்து கொண்டிருந்த என் இதயம்.

சொல்லத் துடித்தது என் மனது.  ஆனாலும் சொல்லும் சந்தர்ப்பங்களை கிட்ட நெருங்காது நீ விரட்டிக் கொண்டிருந்தாய்.

புவனா., உன்னைப் பார்க்கின்ற பொழுதெல்லாம்
உன்னுடன் பேச்சுக் கொடுக்க எனக்கு மூச்சுத் திணறியது. உன் அமைதியான பார்வைக்குள் நான் தொலைந்து திரும்பவும் வருவதற்குள் நீ எங்கோ தொலைவில் போய்க்கொண்டிருக்க என் வாய் மட்டும் தனியாக பேசியதுண்டு.

நான் ஊர் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

ஒரு வயதானவர் என்னைப் பார்த்த பார்வையில் ஏதோ எழுதியிருந்ததை நான் படித்துக்கொண்டு என் நடை கொஞ்சம் கொஞ்சமாய் தளரும் தருணத்தை நான் உணர ஆரம்பித்த போது ......

என் எதிர் வீட்டு யன்னலுக்கு இன்று என்ன ஆச்சு. ? என் நெஞ்சுக்குள்ளே உதறிக்கொண்ட பெருமூச்சு., என்னென்னவோ சொல்லி என்னைத் திட்டித் தீர்க்கிறது.

தப்பித் தவறி நீ ஊரை விட்டே போயிருந்தால்

நான் வீட்டைக் காலி பண்ணுவதில் எந்தவித அர்த்தமேயில்லை. ஊர் நினைத்தது உண்மையாகிவிடும். எனக்குள்ளே ஓற்றை வண்டி அச்சுக் களன்றது போல் ஓடிக் கொண்டிருந்தது.

ஊர் எல்லைக்குள் நுழைகின்றேன்.  ஊரெல்லாம் உன் பேச்சு.

புவனா ஏனிந்த முடிவு.?   எட்டடி தொலைவில் என் வீட்டுக் கதவு. எத்தனை நாள் உனக்காக விழித்திருந்தேன்.  உன் வீட்டு விளக்கு அணையும் வரையில்., காவலுக்கு நானிங்கு இருப்பது உனக்கு தெரிய வர காரணங்கள் இருப்பதை நீமட்டும் அறிந்திருந்தால் இன்று இந்த முடிவுக்கு நீ போயிருக்க மாட்டாய்.

நான் வீடு வந்து சேர்ந்த போது.,

நீ இந்த ஊரை மட்டுமல்ல.,  என் உயிரையும் எடுத்துத்தான் சென்றிருக்கின்றாய்.  உன் பாதி உயிர் போகும் போது என்னென்ன நினைத்திருப்பாயோ.?

தனித்தனியாக இருவர் வாழ்ந்து காட்டலாம். ஆனால் அது சமுதாயத்தின் கண்களுக்கு ஜோடியாகத்தான் தெரியுமென்பது உனக்கும் எனக்கும் தெரியாமல் போய்விட்டது.
அவளுக்கென்றொரு மனம் இருந்திருக்கலாம். அதை யாருமே படிக்கத் துணியவேயில்லை.

காதும் காதும் வைத்ததுபோல் கதைக்கின்ற கதைகளெல்லாம் அச்சுக் கூடத்தில் பதிவாகும் முன்னர்
பரதேசிக் கூட்டங்களே......

உங்களை ஒன்று கேட்கின்றேன.

நீங்கள் அவளை வாழத்தான் விடவில்லை. அவள் படி தாண்டாத பத்தினியென்பதை இப்போதாவது
சொல்லிவிடுங்கள்.

தனியாக வாழத் துணிந்ததுதான் அவள் செய்த ஓரே தப்பு.   அந்த ராத்திருக்கு சாட்சியாக அவள் தனிமைக்குத் துணையாய் இருந்தது., அவளோடு காரில் அடிபட்டு இறந்த அந்த நன்றியுள்ள ஜீவன் மட்டும்தான்.  அனாதையாக வளர்ந்து வாழ்ந்த அவள் போகும் போது தனியாகப் போகவில்லை.

சந்தேகம் பிறந்துவிட்டால்....சத்தியமும் நிலைப்பதில்லை.
.
.
அருள் நிலா வாசன்.     

Posted by அருள்நிலா வாசன் at 18:00 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சிறு கதை

Friday, 9 October 2015

உன்னைத் திரும்பவும்

தலை எழுத்தை
மாற்றி எழுத
தண்ணீரில் கதை
எழுதி
அச்சுக்குக்
கொடுத்தது போல்
பத்திரத்தில்
அழுத்தி வைத்த
அவசரக்
கையெழுத்தில்
விவாகமும் ரத்தாகி
பிரிந்தே போனோம்


வெகுதூர இடைவெளியில்
வருடங்கள் நாலு
வரிசையாய்
கடந்தாலும்
இன்னொரு
திருமணத்தில்

உருமாறிப்போன
உன்னைத் திரும்பவும்
பார்க்க
நேர்ந்த போது
மன அழுத்தத்தில்
இருந்த எனக்கு
என் தலையே
பிளந்தது போல்
இருந்தது
மீண்டும்
சேர மாட்டோமா என்று...
,
,

அருள் நிலா வாசன்
09.10.2015                       

Posted by அருள்நிலா வாசன் at 15:38 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

நீமட்டும் இப்போது

அள்ளி எறியும்
வெய்யிலுக்குள்
அடங்காமல்
என் நெஞ்சில்
துள்ளி விரிகிறது
ஆயிரம் நினைவலைகள்..

வெள்ளிக் கொலுசுமணி
வெறுங்கழுத்துக்குப்
பாசிமணி..... நீ
கொண்டுவந்து
என்னருகில்
காற்றுக்கும் இடமின்றி
பள்ளிகொண்ட
நேரமெல்லாம்
ஊற்றெடுக்கும்
உன் பருவராகம்.....

வயல்காட்டு வரப்பெங்கும்
உன் நிழலைத்
தேடிய நான்
அப்பருக்குப் பசியென்று
அருகிருந்து பரிமாற
ஒருபிடி சோற்றிற்குள்
ஒளிந்திருந்தே
என்னை
உருட்டி எடுக்கின்றாய்...

உன் நினைப்பெல்லாம்
அடிநெஞ்சில்
ஒவ்வொன்றாய்
ஊடுருவி
மூச்சாய் முட்டுதே
என்
முந்தாணையில்
முடிச்சாகி......

நீமட்டும் இப்போது
என்னருகில்
இருந்திருந்தால்
கருக்கொள்ளும்
மேகங்கள்
எம்மிடத்தல் தோற்றிருக்கும்
.                                                      .
Posted by அருள்நிலா வாசன் at 09:17 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

நித்திரையில் மட்டும்

வட்டிக்குப் பணம்
வாங்கி
வயல் காணியை
வங்கியில் வைத்து
வயசுக்கு வந்த
தங்கச்சியின்
வழையலை
வாங்கித் தரலாமென்று
உறுதிமொழியில்
முத்திரை குத்தி
பக்கத்து
வேலிக்கும் தெரியாமல்
வெளி நாட்டுக்கு
உன்னை
அனுப்பி வைத்தேன்...

தொலைவில்
ஒரு வெடிச்சத்தம்
விழுந்து படுத்த
உன் அப்பா
எழும்பவே இல்லை
வெள்ளைச் சேலை
என் துணையானது
படிப்பைப்
பாதியில் நிறுத்திய
தங்கச்சி திருமணம்
தவணை முறையில்
தள்ளிப் போனது

இப்போது
வெற்றுப் பத்திரமாய்
வெறுந்தரையில்
நான்
வாங்கிய
பணமெல்லாம்
வெடி வைக்கிறது
எனக்கு..

உத்தரவாதம் தந்த
நீ மட்டும்
அங்கு
நிரந்தரமாய்
பதிவிடமாம்
உலா வந்தது
உன் காதல்
கதையில்
முகவரியும்
தெரியாமல்
முகத்திரையும்
கிழியாமல்
முன்னேறிய
உன் பிழைப்பு...

முத்திரையில்
கையெழுத்து
முன் நம்பிக்கையில்
வைத்த எனக்கு
நித்திரையில்
மட்டும்
நிற்காமல்
அடிக்கிறது
உன்
தொலைபேசி
அழைப்பு..

இப்படியே
நான்
நீட்டி நிமிர்ந்துவிட்டால்
நிச்சயம்
வரும்
உனக்கொரு
கடைசி.......அழைப்பு
மகனே
அதுவரைக்கும்
நான் தான்
உன் அம்மா.....
அருள் நிலா வாசன்.
9.10.2015                                  .
Posted by அருள்நிலா வாசன் at 08:54 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

அதுவரை நான் காத்திருப்பேன்

ஏமாற்றம் எப்போதும்
என் வழியில்
தொடர
நீமட்டும் என்றும்
உன் வழியில்
இடர
மாற்றம்
ஒன்று
தேடிவர
மறுபடியும்
மாரி ஆத்தாவை
நான்
மனசார
வேண்டிக்கொண்டேன்..

உனக்கும்
எனக்கும்
என்று
எப்பவுமே
ஊர் எல்லையில
காத்திருந்த
எதையும்
எதிர்பார்க்காத
அந்த மரம்

புயலுக்குப் பின்னும்
இப்பவும்
உன்னையும்
என்னையும்
தேடித்
தனி மரமாய்
நிற்கிறது......

ஊரைவிட்டுப்
போன நீ
இயலாமை
என்றுசொல்லி
முயலாதிருந்து
உன்னையே
நீஅழித்திடாதே.....

நீ குடியிருக்கக்
காத்திருந்த
கோயில் வாசல்
என்றும்
உனக்காகத்
திறந்திருக்கும்......

ஊரென்ன
சொன்னாலும்
உனக்கென்ன
வந்தாலும்
உன்னை நான்
ஏற்றுக் கொள்வேன்......

ஒரு பொழுது
சாய்ந்தாலும்
மறு பொழுது
சாத்தியமாய்
நமக்காக விடியும்
அதுவரை
நான் காத்திருப்பேன்                
  .
Posted by அருள்நிலா வாசன் at 08:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Wednesday, 16 September 2015

நாளை முதல் குடிக்க மாட்டேன்

மேகம் இறங்கி வந்து
கூரையில
உட்கார்ந்தது போல்
மூடிகொண்டது
முகில் கூட்டம்
மப்பும் மந்தாரமுமாய்....

முழு நீளக்
கும்மிருட்டில்
கூச்சலிட்டுக்
குமிறிக் கொண்டு
வந்த
கூனல் விழுந்த
குடும்பத்
தலைவர்
அவர்
கைக்கடிகாரம்
காட்டிய நேரம்
இப்போதுதான்
எட்டுமணி..
பகல் முழுதும்
மதுவின் மயக்கத்தில்
அது ஓடாமல்
நின்று போனதும்
தெரியாமல்.....

பற்றைக்குள் 
ஒளித்து வைத்த
பகலிறக்கிய
கள்ளு முட்டியின்
பச்சை வாசத்தை
இப்போதும் தேடுகிறார்...

மெட்டறுந்த 
பாட்டு வேற
பாகவதர் போல
ரோட்டையே
சொந்தமாக்கி
குறுக்கும் நெடுக்குமாய்
குந்தி எழுந்து
நடை பழகி

வீடு வந்து
சேர்ந்த போது
நாய் கூட 
மதிக்கவில்லை
நக்கலாய் சிலிர்த்தது
குடிகாரனென்று....

நாளை முதல் 
குடிக்க மாட்டேன்
நன்றியுள்ள நாயே....

வீட்டுக்கு வெளியே
விழுந்து படுத்தவர்
இன்னும்
எழும்பவே இல்லை
பின்னிரவும்
தாண்டி
நண்பகலில்
நடு முற்றத்தில்
நாளைய கனவுடன்...

குடிகாரன் பேச்சு
அவருக்கே
  விடிந்தால்தான் தெரியும்...

அருள் நிலா வாசன்
16.09.2015                                       






Posted by அருள்நிலா வாசன் at 06:33 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Monday, 14 September 2015

ஆணியிலே தொங்கவிடு

வேண்டாமென்று
நீ தூக்கியெறிய
நானுந்தன் வீட்டு
விளக்குமாறு அல்ல

நீதான்
முதன் முதலில்
உன்
வர்ணங்கள் பூசிய
உன் முதல்
எழுத்துப் பலகை...

அப்போது
உன் கண்ணுக்கு
பளிச்சென்று
தெரிந்த
என்னை
இப்போதே

ஆணியிலே
தொங்கவிடு
எல்லோரும்
அழித்து அழித்து
எழுதிவிட்டுப்
போகட்டும்
என்
விதியின் வரிகளை.......

அருள் நிலா வாசன்.
14.09.2015                                      .


Posted by அருள்நிலா வாசன் at 02:33 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Tuesday, 1 September 2015

விட்டெறிந்த தேங்காய்கள்

விட்டெறிந்த தேங்காய்கள்
லாச்சப்பல்
வீதியெங்கும்
சப்பளிந்து கிடக்கிறது
ஏழைக் குடும்பங்கள்
எத்தனையோதொட்டுத் தின்ன
வீட்டில்
சட்டினிக்கும்
வழியின்றிப்
பட்டினியில்
வாழ்க்கை
வெறுந்தரையில்
வெறுக்கிறது

மண்ணுக்காய்
உழைத்தவர்கள்
மழைக்கொதுங்க
மனையின்றி
மாற்று
வழியுமின்றிக்
காற்றையள்ளித்
தின்றுவிட்டு
கடக்கின்ற
நிகழ்காலம்
சிதறிக் கிடக்கிறது
பிள்ளையாருக்கு
பக்தியென்று
போட்டுடைத்த
தேங்காய் போல்....
ஏழைகளை
எட்டி நின்று
ஏழனமாய்க்
குட்டுகின்ற
நிலையற்ற
எதிர்காலம்
ஏக்கத்தில்
மிதக்கிறது
கடைசியில்
என்னவென்று.....
அருள் நிலா வாசன்
1.09.2015
Posted by அருள்நிலா வாசன் at 04:04 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Sunday, 30 August 2015

தலையெழுத்து மாறியதை

பிரித்துப் பார்க்கையில
சிரிப்புத்தான் வந்தது
பிரியா வரம்கேட்டுப்
பிரியமுடன்  நீ
இன்று.....

யாருமில்லா நேரம்
ஊருக்குள்ள வந்திறங்க
எங்கிருந்து வந்தது
இன்று
இந்த வீரம்

வேர்விட்ட நம்உறவு
வெறும் 
கதையாகிப்
போகுமென்று
ஊர் பெயர்
சொல்லாத
சாத்திரியும்
சொல்லவில்லை....

மேஸ்திரியைக் கட்டி
நானும் கல்லரிந்து
கணக்குப் பார்த்து
மேலும் கீழும்
வீடுகட்ட
மெல்ல நடை
போட்டுக்கொண்டு
காலம்தான் நீழும்
என்று
கணக்கர் வந்து
சொன்னபோதும்
காதில் நான்
விழுத்தவில்லை....

சொல்லாமல்
ஊரைவிட்டே
சுயநலமாய்
போனதுதான்
நீ செய்த 
மாகுற்றம்
இனியென்ன
வரக்கூடும்
என் பெயரில்
மாற்றம்.....

முற்றுப் புள்ளி
வைக்க
முன்னர்
முடிவாக 
நீயெழுதிய
மூன்றே வரிகள்
முழுசாகப் படிக்கு
முன்னர்
நனைந்தே கிழிந்தது
கண்ணீரில் கடிதம்...

கண்டபடி எழுதாதே
வார்த்தைகள் கவனம்

தலையெழுத்து
மாறியதை
இன்று
என் கையெழுத்து
சொல்லும்
இனியென்னை
தினமும்
உன் நினைவே
கொல்லும்.....

அருள் நிலா வாசன்           
Posted by அருள்நிலா வாசன் at 15:22 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

Sunday, 23 August 2015

குலை என்ன விலை


குலை என்ன
விலை என்று
கேட்டு
நான்
விசாரிக்க


சீப்பா
வேணுமோ
என்று
அவன்
கொஞ்சம்
விவரமாய்
கேட்க

குலையை
சீப்பா
தாவென்று
நான்
விடுத்து
கேட்க

வில்லங்கம்
பிடிச்ச
வியாபாரமென்று
அவன்
குலை குலை
என்று
குலைத்து
விலை சொல்லாமலே
என்னை
விரட்டி
அடிக்க

தலை தப்பினால்
தம்பிரான்
புண்ணியம்
என்று
வாங்காமலே
வந்த
வாழைப்பழ
குலை..............
.

                                 
Posted by அருள்நிலா வாசன் at 11:36 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை

இழுத்துப் பூட்டிய ஆமைப் பூட்டு...

எல்லையில
கல்லுமதில்
எடுத்தெறிஞ்சு
சொல்லும் பதில்
ஏறிக் குதித்து
வந்தாலும்
அதிரடியாய் 
இங்கு
அதி உயர்
பாதுகாப்பு..

 கோடை வெய்யில்
வாடைக்காற்று
கொட்டுமழையில்
வெட்டும் கீற்று
கிட்ட வந்து
தாக்காமல்
தப்பிப் பிழைத்துக்
தரமாய் பழுக்க
தனியாய் தொங்கும்
பலாக்காய்..

முள்ளு விரிந்து
முழுசாய் கனிந்து
பலமாய் வாசம்
மூக்கு நுனியில்
முட்டுமுன்னர்
முற்பாதுகாப்பென்று
கொழுந்து விட்ட
அறிவில் நனைந்து
இழுத்துப் பூட்டிய
ஆமைப் பூட்டு...

இரும்புத் தூணுக்குத்
துணையாய்
இறுதிவரைக்கும்
பூட்டும் திறப்பும்
கூட்டுச் சேர்ந்து
பலமாய்
இருக்கும்

ஆனால்..

பலா...பழக்
காப்புறுதியில்
எத்தனை நாளுக்கு
என்னதான்
உத்தரவாதம்..?
                                   
Posted by அருள்நிலா வாசன் at 09:57 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: கவிதை
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

About Me

அருள்நிலா வாசன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  September (1)
  • ►  2017 (7)
    • ►  December (2)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  February (2)
  • ►  2016 (62)
    • ►  October (15)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (5)
    • ►  March (16)
    • ►  February (14)
    • ►  January (7)
  • ▼  2015 (70)
    • ▼  December (6)
      • போகட்டும் விட்டுவிடு...
      • கூடு திரும்ப.....
      • காத்திருந்து கடைசியில்
      • போதை தெளிந்த பின்...
      • காற்றுக்குத் தூதுவிட்டேன்
      • விடியாத தேசத்தின் முடியாத சோகம்......
    • ►  October (7)
      • மண் இருக்கும்வரை
      • சயிக்கிள் செயின்
      • எதிர் வீட்டு யன்னல்
      • உன்னைத் திரும்பவும்
      • நீமட்டும் இப்போது
      • நித்திரையில் மட்டும்
      • அதுவரை நான் காத்திருப்பேன்
    • ►  September (3)
      • நாளை முதல் குடிக்க மாட்டேன்
      • ஆணியிலே தொங்கவிடு
      • விட்டெறிந்த தேங்காய்கள்
    • ►  August (6)
      • தலையெழுத்து மாறியதை
      • குலை என்ன விலை
      • இழுத்துப் பூட்டிய ஆமைப் பூட்டு...
    • ►  July (7)
    • ►  June (7)
    • ►  May (19)
    • ►  April (6)
    • ►  March (9)
Simple theme. Powered by Blogger.