நான் வீடு வந்து சேர்ந்த போது....
பூட்டியே கிடக்கிறது எதிர்
வீட்டு யன்னல். ஏனென்று தெரியவில்லை. புத்தகங்களெல்லாம் புழுதி படிந்து
கிடக்கிறது. முற்றத்தில் விழுந்த முல்லைப் பூக்களில் அவள் சுவாசம்
ஒட்டிக்கொண்டிருக்க முட்டிக் கொள்ளும் மேகக் கூட்டம் முனகிக்
கொண்டிருந்தது. இருட்டு இழுத்து மூடிக் கொண்டு இன்னும் என்னென்னவோ தேடிக்
கொண்டிருந்தது.??
வேலை இடத்திலிருந்து ஷோட் லீவு போட்டு வீட்டுக்கு
புறப்பட்ட நான்..ஒத்திகையில் இறங்குகின்றேன். இன்று வெள்ளிக்கிழமை.,
எப்படியும் நான் சொல்லுவதாக எடுத்த முடிவை இனியும் தாமதிக்க முடியாது.
சடன் பிரேக் போட்ட சைக்கிள் சத்தம் என் காலடியில் அவளா சொன்னாள்! அவசரமாக வந்த ரங்கன் என்னைக் கேட்டது
இப்பவும் என் மூளைக்குள் ஓரு மூலையில் இறுக்கிக் கொண்டிருந்தது.
அப்படியொன்றும் இருக்காது. இது என்னை நானே சமாளிக்க எனக்குள் ஒரு பிரமை.
மேலும் என் அடி நெஞ்சில் ஒரு பட படப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதுவரைக்கும் நான் சொல்லாத விடயத்தை இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்
புவனா. ஒத்திகை பார்க்கிறது விட்டு விட்டுத் துடித்து கொண்டிருந்த என்
இதயம்.
சொல்லத் துடித்தது என் மனது. ஆனாலும் சொல்லும் சந்தர்ப்பங்களை கிட்ட நெருங்காது நீ விரட்டிக் கொண்டிருந்தாய்.
புவனா., உன்னைப் பார்க்கின்ற பொழுதெல்லாம்
உன்னுடன் பேச்சுக் கொடுக்க எனக்கு மூச்சுத் திணறியது. உன் அமைதியான
பார்வைக்குள் நான் தொலைந்து திரும்பவும் வருவதற்குள் நீ எங்கோ தொலைவில்
போய்க்கொண்டிருக்க என் வாய் மட்டும் தனியாக பேசியதுண்டு.
நான் ஊர் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தேன்.
ஒரு வயதானவர் என்னைப் பார்த்த பார்வையில் ஏதோ எழுதியிருந்ததை நான்
படித்துக்கொண்டு என் நடை கொஞ்சம் கொஞ்சமாய் தளரும் தருணத்தை நான் உணர
ஆரம்பித்த போது ......
என் எதிர் வீட்டு யன்னலுக்கு இன்று என்ன
ஆச்சு. ? என் நெஞ்சுக்குள்ளே உதறிக்கொண்ட பெருமூச்சு., என்னென்னவோ சொல்லி
என்னைத் திட்டித் தீர்க்கிறது.
தப்பித் தவறி நீ ஊரை விட்டே போயிருந்தால்
நான் வீட்டைக் காலி பண்ணுவதில் எந்தவித அர்த்தமேயில்லை. ஊர் நினைத்தது
உண்மையாகிவிடும். எனக்குள்ளே ஓற்றை வண்டி அச்சுக் களன்றது போல் ஓடிக்
கொண்டிருந்தது.
ஊர் எல்லைக்குள் நுழைகின்றேன். ஊரெல்லாம் உன் பேச்சு.
புவனா ஏனிந்த முடிவு.? எட்டடி தொலைவில் என் வீட்டுக் கதவு. எத்தனை நாள்
உனக்காக விழித்திருந்தேன். உன் வீட்டு விளக்கு அணையும் வரையில்., காவலுக்கு
நானிங்கு இருப்பது உனக்கு தெரிய வர காரணங்கள் இருப்பதை நீமட்டும்
அறிந்திருந்தால் இன்று இந்த முடிவுக்கு நீ போயிருக்க மாட்டாய்.
நான் வீடு வந்து சேர்ந்த போது.,
நீ இந்த ஊரை மட்டுமல்ல., என் உயிரையும் எடுத்துத்தான் சென்றிருக்கின்றாய். உன் பாதி உயிர் போகும் போது என்னென்ன நினைத்திருப்பாயோ.?
தனித்தனியாக இருவர் வாழ்ந்து காட்டலாம். ஆனால் அது சமுதாயத்தின் கண்களுக்கு
ஜோடியாகத்தான் தெரியுமென்பது உனக்கும் எனக்கும் தெரியாமல் போய்விட்டது.
அவளுக்கென்றொரு மனம் இருந்திருக்கலாம். அதை யாருமே படிக்கத் துணியவேயில்லை.
காதும் காதும் வைத்ததுபோல் கதைக்கின்ற கதைகளெல்லாம் அச்சுக் கூடத்தில் பதிவாகும் முன்னர்
பரதேசிக் கூட்டங்களே......
உங்களை ஒன்று கேட்கின்றேன.
நீங்கள் அவளை வாழத்தான் விடவில்லை. அவள் படி தாண்டாத பத்தினியென்பதை இப்போதாவது
சொல்லிவிடுங்கள்.
தனியாக வாழத் துணிந்ததுதான் அவள் செய்த ஓரே தப்பு. அந்த ராத்திருக்கு சாட்சியாக அவள் தனிமைக்குத் துணையாய்
இருந்தது., அவளோடு காரில் அடிபட்டு இறந்த அந்த நன்றியுள்ள ஜீவன்
மட்டும்தான். அனாதையாக வளர்ந்து வாழ்ந்த அவள் போகும் போது தனியாகப்
போகவில்லை.
சந்தேகம் பிறந்துவிட்டால்....சத்தியமும் நிலைப்பதில்லை.
.
.
அருள் நிலா வாசன்.

No comments:
Post a Comment