Wednesday, 24 February 2016

மீண்டுமவள் குழந்தையாகிறாள்.

கருவறை கிழித்துப்
பெருவலி கொடுத்து
கூச்சலிட்ட
குழந்தை முகம்பார்த்து
பொக்கிஷமாயவள்
பெற்றவலி மறந்து
பொங்கியணைத்து
புது யுகமானாள்..


வேதனை மடியில்
இரவும் பகலும்
ஈடு கொடுத்து
இடையில் தாங்கி
நடைகள் மறந்து
தொடையில் தாங்கியும்
துன்பம் மறந்த அம்மா...


போதும் போதும்
என்றாகுமுன்னே
பொன்னும் மண்ணும்
பொலிவுற சேரும்
இனிதான வாழ்வும்
இணைத்தவள்
பாவி
பேரன் பேத்தியை
உயிராய் வளர்த்து
காலத்தோடு
கலந்தே
காற்றுப்போல
எடையும் குறைந்து
மீண்டுமவள்
குழந்தையாகிறாள்..

பிள்ளைகளேனோ
பிரிவினை காட்டி
முதியோர்
இல்லம் தேடுவதில்
முன்னோடிகளாக.....
.

.
23.02.2016      
  

உன் முகம் மட்டும்

மனசும் மனசும்
ஒட்டுமென்று
என் மனசை எல்லாம்
பேப்பரில் கொட்டி
சோறு பூசிக்
கவரில் ஒட்டி
சொந்தங்கள்
யார் கண்ணும்
என் மீது படாமல்
பெட்டியினுள்
நான் தள்ளிவிட்ட
என் ஆசைக் கடிதம்..

காப்பு வளையல்
கொலுசென்று
கம்பு வித்து
வாங்கி வைத்தேன்
கண்ணாலம்
காட்சியென்று
கைபிடிக்கும்
நேரமதில்
கண்ணூரு படாமல்
பேச்சியம்மனிடம்
வாய் பேசாமல்
வேண்டிக்கிட்டேன்...

சோப்பு சீப்பு
கண்ணாடி
சொண்டு சிவக்க
வாய் பூச்சு
கையோடு வாங்கிவரக்
கண்ணாளா
உன்னிடம்
காசு இருக்கா
தெரியலயே...

உன்னைத் தேடி வரத்
துணிவுமில்லை
என் கடித்ததுக்கு
பதிலுமில்லை
ஊருக்கு வரும்
பஸ் எல்லாம்
ஏறி இறங்கிப்
பார்க்கிறேன்.

என் நினைவில்
இருக்குமந்த
எனக்கான
உன் முகத்தை மட்டும்
இதுவரைக்கும்
காணலையே..



என்னை உனக்கு
நினைவிருக்கா......?

அதுவும் தெரியலயே..?
.
.

23.02.2016

உள் நோக்கத்துடன் வந்தவனுக்கு

திட்டிக் கொண்டே போன
மேகத்தை
தலை நிமிர்ந்தும் பார்க்காது
திடகாத்திரமாய்
திரும்பத் திரும்ப
திகிலூட்டும் ஓரிசையில்
எல்லோருக்கும்
எச்சரிக்கை
விட்டது..

ஊர்ந்து கொண்டே போன
உள் நோக்கத்துடன்
வந்தவனுக்கு
கவ்விப் பிடிப்பதில்
மட்டும் தான்
கவனமிருந்தது..

இழுத்துக் கொண்டே போன
நேரத்தைக் கணக்கிடாமல்
அங்கேயே
அகலக் கால் வைத்து
அணைத்து
உள்ளிழுத்து
உட்கார்த் துடித்தது
கோழி
தன்
வரவு செலவை
வாய் விட்டெண்ணிக்
கணக்குப் பார்க்கத்தான்....
.
.

23.02.2016   

யாருக்கு நான் பாரம்

தேடிவந்த அன்பு
இன்று தூரமாய்
போனதென்ன
சாலையோரம்
சருகுபோல
இருந்த என்னை
ஓடி வந்தே
அரவணைத்த
கள் வடிந்த
உள் நெஞ்சம்

தூசு படிந்த
உன்னிதய வாசலுக்கு
நான் துடைப்பமான
அந்நொடிப்பொழுது
உள்ளே நுழையவிட்டு
என் மனதை
ஊனமாக்கினாய்....

தெருத் தெருவாய்
தேடி பின்பு
வாடிப் போன
என் நெஞ்சம்
இன்று ஈரமாய்
விதைத்து வைத்த
வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
முளைத்த பின்னும்
பிடுங்கி எடுக்க
நினைப்பதென்ன ....


சருகாக இருந்திருப்பேன்
சாலையோரம்
இன்னேரம்
யாருக்கு நான் பாரம்
.
.
23.02.2016    


நெற்றிக்கு திலகம்...

பூவும் பொட்டும்தான்
எமக்கான வாசம்
புன்னகையும்
புனிதமும் தான்
உனக்கான நேசம்
யாவும் எமக்காக
படைத்தவன்தான்
என்னாளும்
நெற்றிக்கு நீ பூசும்
திலகம்.......
.

.
23.02.2016

Monday, 15 February 2016

என் காதல் ஓவியமாய்.

நீதானா என்
இதய வீணையை
மறுபடியும் மீட்டியது
இசையில் இணைந்தே நான்
உன் பாடல் வரிகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
என் காதல் ஓவியமாய்...
,
,
அருள் நிலா வாசன்

16,02,2016                                  .

இதுதான் காதலா..?

பார்வைகள் பரிமாறி
பந்தாடிய ஓருணர்வில்
உள்ளங்கள்
உரசியதால்
உருவான
இடி மின்னல் முழக்கத்தில்
இதயங்கள் இடம் மாறி
உள்ளே இழுத்துவிட்ட
ஒரே மூச்சுக்குள்
இரட்டிப்பு ஆனந்தம்

இதுதான் காதலா..?
.
.
அருள் நிலா வாசன்
15.02.2016                                           .

காதலே நீ வாழ்க...

சிரிப்பைச் சிந்தி
உந்தி மிதிக்குது
உண்மையாய்
வளர்ந்த
உயரிய காதல்
கூடவே பயணிக்கும்
உள்ளத்தை
சந்தித்த
பெண்மையை
நெருங்காது சாதல்..

காதலே நீ வாழ்க....
..

.
16.02.2016 
அருள் நிலா வாசன்                 .

காதல் வலியா...?

போதும் போதும் என்றேன்
நிறுத்தவில்லை
நீ பொறுமையிழந்து
பொழிந்தது
போதும்
இப்போதும் சொல்கின்றேன்
உனக்குள் இருப்பது
யாரென்று சொல்லு
அது என்பெயர்
இல்லையென்றால்
இப்போதும்
எப்போதும்
அதைக் கேட்கும்
துணிச்சல்
எனக்கில்லை
போதுமா.....?

இதுதான் காதல் வலியா...?
.
,
அருள் நிலா வாசன்.

16.02.2016                                                  .

என் மனசைப் போல.

உன் வரவுக்காகத்தான்
நான் இங்கு
காத்திருந்தேன்
பட்டாம் பூச்சிக்குமா
உன் மீது காதல்
இதோ
நானே அதை
உன் கையில்
சேர்க்கின்றேன்.
கசங்காமல்
பார்த்துக்கொள்
என் மனசைப் போல.......
.
.
அருள் நிலா வாசன்

15.02.2016                                .

எல்லை இல்லா காதல்!!!

எல்லை இல்லா காதல்!!!
“””””””””””””””””””””””””””””
 
கொண்ட காதல் மட்டும் நிஜமென்றால்
நிறமும் பணமும் நிஜமல்ல
நீண்ட காதல் மட்டும் போதுமென்று
ஆயுள் வரைக்கும் கூட வரும்


பூவும் இலையும் பரிசாகும்
புன்னகை கூட பரிமாறும்
யாவும் இயற்கையின் படைப்பாகும்
உணர்ந்தவர் இதயம் கனியாகும்!!!

.

(அருள் நிலா வாசன்)

15.02.2016 
 

Saturday, 6 February 2016

நீயே சொல்லு....

கண்களை விரித்துப்
பார்த்தேன்
பகலெல்லாம்
தூங்கியதுபோல்
பிரமை
கண்களை
மூடிக்கொண்டே
நினைவுகளை
தடவிப் பார்க்கிறேன்
யன்னலை மூடி
நீ சொன்னதையெல்லாம்
நான் கேட்கத்
துடித்த பொழுது
தாங்குமா
உன் நெஞ்சம்
தூங்கு என்றாய்
வீடெங்கும்
உன் சுவாசம்
வந்து வந்து
போகிறது
உயிரே
உனக்காகத்தான்
இன்னும்
நானும்
சுவாசிக்கிறேன்....

காற்று என் இதயத்தைக்
கடனாகக்
கேட்கிறது
கொடுக்கவா
இல்லை
தடுக்கவா..
நீயே சொல்லு....

 .
.
06.02.2016                                .

நிறைகுடமானேன்

தொட்டு வைத்த
புள்ளிகளில்
தெரிந்தது
உந்தன்
பூமுகம்

என் நெஞ்சில்
நின்றவை
தொடராய்
இணைய
நிறைவாய்
உந்தன்
பெயரையும்
வரைந்தேன்
உன்
பார்வை பட்டே
நான்
நிறைகுடமானேன்
.
.
06.02.2016        
                                 .


எனக்குள் நீ........

அதிகாலை நித்திரையை
அப்படியே துரத்திவிட்டு
உன் நினைவுகளை
இழுத்து வைத்த
என் படுக்கையை
எடுத்து விரித்து
அதன் மீதே
உட்கார்ந்து
என் இருவிழிகளை
இழுத்து மூடினேன்..

கண் நிறைஞ்ச
காட்சிகளாய்
வான் வெளியில்
பறவைகளின்
வரிசைப் படுத்தலில்
உன் கால் தடங்கள்
இன்னும் என்
கண்களில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
என் நம்பிக்கையில்
நாள் முழுதும்
என் உயிர்
நீதானே......

.
.
06.02.2016
.
.