Tuesday, 31 March 2015

யார் செய்த மாயமோ...?


கை நிறையப்
பொய்யை அள்ளிக்
கண் கட்டி 
வித்தை
காட்டிக்
காரியங்கள்
நடத்த
காலங்கள்
ஒத்துவர
சேருமந்த
சில்லறைகள்

பொறுக்கி
எடுத்தவன்
ஒவ்வொன்றாய்
எண்ணப்
பொழுதுகள் போதாமல்
பொய் 
மெய்யில்
தொடரும்
தூரப் பயணத்தில்

தொடுத்த எண்ணத்தில்
அவசரமாய்
கடந்த
பாதையில்
கிடந்த
பழத்தில்
சட்டென்று
சறுக்கி
சரீரம்
சரிந்துவிழத்

தூரமாய்
அவன் கண்ணில்
துல்லியமாய்
தெரிகிறது
கானல் நீர்

யார் செய்த மாயமோ...???

அருள் நிலா வாசன்      

Saturday, 28 March 2015

அன்றெனக்கு தெரிந்திருந்தால்

சிட்டுப் போல்
பறந்து வந்து
என் மடியில்
உட்கார்ந்தாள்

தொட்டுப்
பேசத் துணிச்சலின்றி
தொடாமல்
நானிருந்தேன்

விட்டுப் போன
உறவை சேர்த்து
வைக்க நான்
காரணமாவேன்
சத்தியத்தைக் 
கையில் வைத்து
விடாமல் பேசினாள்

திட்டு வாங்கத்
திராணியின்றி
திணறிப்போன
நான்
திரும்பிப்
பார்க்கு முன்னே
திண்ணையிலே
வந்து நின்றான்

திகதி குறித்த
மாப்பிள்ளை.....

கட்டு  தாலி
என்றெனக்கு
அன்று சொல்ல
எவருமின்றிக்
காசை மட்டும்
கடவுளென்று
கனவு கண்ட
அவள் குடும்பம்......

எட்டுப் பட்டி
ராசனென மதி கெட்டுப்
போனவர்கள்
விதியென்று
கதை முடிக்க
வெளி நாட்டு
மோகத்திற்கு
அடகு வைத்த
அவள் வாழ்க்கை.....

கெட்டுப் போகுமென
அன்றெனக்கு
தெரிந்திருந்தால்
என் மடியில்
வைத்தே
நான்
மச்சானாய்
கொடுத்திருப்பேன்
மங்கலமாய் 
தாலி வரம்.......

அருள் நிலா வாசன்



    

Tuesday, 24 March 2015

மீண்டும் தயாராகிறாள்...

தொட்டிலை ஆட்டிவிட்டு
தொலைவாய்
தெரிந்த
நிழல் கண்டு
மீண்டும்
அடிவாங்கத்
தயாராகிறாள்...

தூங்காத பிள்ளைக்கு
பசியென்று
தெரிந்தும்
துணியை நனைத்து
வாயில் பிழிந்து
விடுகின்றாள்
பச்சைப்
பிள்ளைக்கு
பச்சைத் தண்ணீர்....

ஊரே அடங்கிப்
போயிருந்தும்
அவனுக்கு
இன்னும்
அடங்கவில்லை....

கால் இரண்டும்
பின்னப் பின்ன
பின்னிரவில்
தேடுகின்றான்
தன்
வீட்டின் வாசல் படி...

வந்தும் வராததுமாய்
அதே
வாடை அடிக்கிறது
தட்டில்
வைக்கிறாள்
 தெண்டல் சோறு

எங்கயடி மீன் குழம்பு..?

ஒட்டிப் போன
தன்
வயிற்றை
தடவிப் பார்க்கின்றாள்
எனக்கு
வாய்க்கரிசி
எப்ப வந்து விழுமோ...

எழுந்து நடக்கின்றாள்

இன்னொரு
பொழுது விடிந்தது.....

அருள் நிலா வாசன்            

நெஞ்சிருக்கும்வரை

பொத்திவைச்ச
ஆசைகளை
ஒவ்வொன்றாய்
பறக்கவிட்டு
மொத்தமாய்
என் கண்ணில்
ஒத்தி ஒத்தி
அழகு பார்த்தேன்..

ஒவ்வொன்றும்
கலர்கலராய்
ஊரெங்கும்
பறக்கையில
ஊரைவிட்டே
போகின்றேன்

ஊர் எல்லையில
போகயில
என்னைப்
பார்த்திருந்த
சாமிக்கிட்ட
உனக்காக
வேண்டிக்கிட்டேன்...

கண்ணுக்குள்ள
உன்னை வைச்சு
காலமெல்லாம்
உன்னை நினைச்ச
உன் நினைப்பை
மட்டும்
என்னோடு
கடைசிவரை
எடுத்துச் செல்ல
உன்
அனுமதியைத்
தருவாயா..?

நெஞ்சிருக்கும்வரை
என்னோடு
நெருக்கமாய்
இருக்கட்டும்...


அருள் நிலா வாசன்.
24.03.2015                                      

Monday, 23 March 2015

என்னைத் தொடும்வரை......

இருந்ததை எல்லாம்
எடுத்துக்
கொடுத்தேன்
என்னை
மட்டும்
ஒழித்து
வைத்தேன்....

அதற்கொரு காலம்
எனக்கென்று
அமையுமென
இருப்பதை எல்லாம்
வெறுத்தேன்
உன்னைத்
தவிர......

இடையில்
நடந்ததை எல்லாம்
மறந்தேன்
இனி
நமக்குள்
நடப்பதைக்
மட்டும் காண...

 நடப்பதை எல்லாம்
மறைத்து
நீ
நடந்ததை
மட்டும் சொல்லு

உன் மரணத்தில்
நடந்தது
என்ன..?

வீதிக்கு வந்த
விதி
இப்போ
என்
கைபிடித்து
சொல்கிறது

 கதையல்ல இது நிஜமென்று.....

அந்த ஒற்றை
விளக்கை
நீயே
அணைத்திருந்தால்.....

இனியாவது
உன்
முகமூடியை
நிரந்தரமாய்
எடுத்துவிடு

உன்
நினைவால்
வாழ்ந்த
நினைவோடு
வாழ்வேன்
நான் 

மரணம் 
என்னைத் தொடும்வரை......

அருள் நிலா வாசன்                   

Sunday, 22 March 2015

எனக்காக ஒரு பொழுதில்

எட்டிப் போன
சூரியன்
மீண்டும் 
என் பக்கம் 
ஏதோ ஒரு நாள்
எனக்காக வருமென்று
நகர்ந்த சில நாட்கள்.

போய்க்கொண்டேயிருந்த
உன்னை
நான்
பொய்யென்று
அறியாமல்
பகலிரவாய்த்
தேடியே கரைந்தது
தொடர்ந்த சில நாட்கள்..

உள்ளேயும் வெளியேயும்
உத்து உத்துப்
பார்க்கின்ற
சின்னக் குருவிபோல்
உன்னை 
நான் ஒரு நாளும்
அப்படிப்
பார்த்ததேயில்லை...

உள் மனது
சொன்னதெல்லாம்
உண்மையென்று
நம்பிக்கொண்டே
இருந்தது
என் தப்புத்தான்....

எனக்காக ஒரு பொழுதில்
உன் கண்ணில்
சில பூக்கள்
ஒவ்வொன்றாய்ப்
பூக்கக்கூடும்....

 அப்போது நான்
உனதாகி
இல்லாமல்
யாருக்கும்
சொல்லாமல்
என் மூச்சு மட்டும்
உன்னையும்
விட்டு
ஊர்வலமாய்
வெளி வந்தபோது......

உன் மனம் மட்டும்
தனியாகப் பேசும்.....


அருள் நிலா வாசன்               .

Friday, 20 March 2015

எனக்கு மட்டும் தான்.....

வெட்டை வெளியில்
வேடிக்கை பார்க்க
வந்தது போல்
வேகமாய் இறங்கியது
வெளிக்கிட்டு
வந்த மழை.....

கட்டை விரலில்
கட்டுப் போட்டதை
மறந்துபோய்
கையிலிருந்த
குடையை
சுண்டி விரித்தேன்

என்ன கோவத்தில்
வந்ததோ தெரியவில்லை
என்னையும்
சேர்த்து
இழுத்துக்
கொண்டே போனது
கண்டவரையெல்லம்
தள்ளி
விழுத்திக்கொண்டு
வந்த காற்று....

இழுத்துப்
பறித்து
நான் வீடு
திரும்புமுன்......

வீட்டைப் பிரித்துக்
கொள்ளையடித்த
சூறாவளி
உன் சேட்டை
மட்டும்
கொடியில்
விட்டுச்சென்றதேனோ,,??

நாத்தம் தாங்காமல்.....

குடித்துக் குடித்தே
குட்டிச் சுவராகிப்
போன

என் புருஷன் தான்
அவர்
எனக்கு மட்டும்தான்....

அருள் நிலா வாசன்.
20.03.2015                                       .

Thursday, 19 March 2015

உன்னிடத்தில் ஒரு நாள்....

மறந்து 
நம் வீட்டில்
விட்டுச் சென்ற
உன் கால் 
தடங்கள் மேல்
நான் கால்
வைத்தபோது
என்னிடம் ஒரு
கேள்வி கேட்கிறது

என் வீட்டுச்
சுவரில்
நீ வரைந்த
ஓவியங்கள்
நிலை மறந்த
என் கண்ணில்
சிலையாகி நிற்கிறது

மனசுக்குள்
அழவிட்டுக்
கன்னத்தில்
வழிகின்ற
வென்னீரில்
நனைந்திட்ட
மாரெங்கும்
புண்ணாகி
மறுபடியும்
என்னுள்ளம்
மௌனத்தில் தவழ்கிறது

நீ இருக்கின்ற 
ஒரு பொழுது
இல்லாத 
பல பொழுது
இனியும்
என் வழியில்
குறுக்கிடுமா..?

துடிக்கின்ற
இதயத்தை
துணிபோட்டு
மூடி
நிரந்தரமாய்க்
குளிராமல் 
சூடாக்கி
வைத்திருக்கின்றேன்

அதை
உன்னிடத்தில்
ஒரு நாள்
உயிரோடு ஒப்படைக்க.....


அருள் நிலா வாசன்  .

மண்ணில் சேர்ந்த மலராய்


வாசல் தெளித்துக்
கோலம் போட
வாசல் கதவு
திறக்கவேயில்லை....

வேரில் பிடித்த
ஈரம் காய்ந்து
இடையில் தோய்ந்து
இன்னும்
நனைய
அடித்து ஊத்தியது
இருட்டில் வந்த
இடியும் மழையும்.

ஒரே நாளில்
கொழுத்தும்
சூரியனைக்
கொள்ளையடிக்க
அடித்துத் தோய்த்து
இறுக்கிப் பிழிந்த
அத்தனை துணியும்
பாரம் தோய்ந்த
கொடியில்
இன்னும்
ஆடிக் கொண்டே
இருக்கிறது......

வீட்டுச் சாவி
வீதியில் கிடக்க
விடுப்புப் பார்த்தவர்
வில்லங்கம் பிடிக்க
வீணாய் போனது
எல்லாம்....

மொட்டவிழ்ந்த மலரின்
வாசம்
மாலையில் சேராமல்
மலர்ந்தும்
மலராத
மண்ணில் சேர்ந்த
மலராய்
என்றும்
எங்கள் கண்களில்.......

அருள் நிலா வாசன்.