Saturday, 28 March 2015

அன்றெனக்கு தெரிந்திருந்தால்

சிட்டுப் போல்
பறந்து வந்து
என் மடியில்
உட்கார்ந்தாள்

தொட்டுப்
பேசத் துணிச்சலின்றி
தொடாமல்
நானிருந்தேன்

விட்டுப் போன
உறவை சேர்த்து
வைக்க நான்
காரணமாவேன்
சத்தியத்தைக் 
கையில் வைத்து
விடாமல் பேசினாள்

திட்டு வாங்கத்
திராணியின்றி
திணறிப்போன
நான்
திரும்பிப்
பார்க்கு முன்னே
திண்ணையிலே
வந்து நின்றான்

திகதி குறித்த
மாப்பிள்ளை.....

கட்டு  தாலி
என்றெனக்கு
அன்று சொல்ல
எவருமின்றிக்
காசை மட்டும்
கடவுளென்று
கனவு கண்ட
அவள் குடும்பம்......

எட்டுப் பட்டி
ராசனென மதி கெட்டுப்
போனவர்கள்
விதியென்று
கதை முடிக்க
வெளி நாட்டு
மோகத்திற்கு
அடகு வைத்த
அவள் வாழ்க்கை.....

கெட்டுப் போகுமென
அன்றெனக்கு
தெரிந்திருந்தால்
என் மடியில்
வைத்தே
நான்
மச்சானாய்
கொடுத்திருப்பேன்
மங்கலமாய் 
தாலி வரம்.......

அருள் நிலா வாசன்



    

No comments:

Post a Comment