Sunday, 26 April 2015

தலையணை மட்டும்.......

தனக்கு மீறியது
தரணியில்
இல்லையென்று
தனக்குத்தானே
தனிப்பாட்டு
பாடும்.....

நேரியவாழ்வில்
நேசமிழந்து
நித்தியமான
தேடல் மறந்து
சத்தியம்
தொலைத்த
நேரம்.....

தன்னைத்
தாங்கிப்
பிடிக்க
தன்னில்
வலுவின்றிப்
போகும்
தணியாத தாகத்தில்
தங்கும்
மணித்துளியில்
தலையணை
மட்டும்
துணைப்பாட்டுப்
பாடும்....

இழுத்துவிடும்
மூச்சு
இரட்டிபாகி
இன்னல்ப்பட்டு
இருளும் ஒளியும்
கலங்கும்
தருணம்
தானாய்
இறங்கும்
தலைக் கனம்.....

அருள் நிலா வாசன்
                                               

மொத்தமாய் நனைந்தது,,,,

பக்கத்து வீட்டில்
பந்தடிக்க
பஞ்சமில்லாமல்
அடித்த வெய்யில்
படலைக்கு வெளியில்
பாத்துக்கொண்டிருக்க
வாய்ப்பாடு
பாடமாக்கப்
போட்டுத் தந்த
வீட்டுக் கணக்குக்கு
வேட்டு வைத்து
வீரமாய்
நான்
வெளிக்கிட
விளையாட போகுமுன்
வேலிக்கரையில்
விழுந்த
விழாத்தி மரத்தின்
அடிகட்டைகளை
அடிக்கி வையென்று
அடுப்படியில்
இருந்தபடி
அம்மாவின்
கீச்சுக் குரல்
கிணத்தடியில்
கிள்ளித் தெளிக்க
எப்பவும்போல
விருப்பமேயில்லாமல்
அள்ளிக் கொண்டுவந்து
அடுக்கிய
அத்தனை
கொள்ளி விறகுகள்
பொறுமையோடு
சரிந்துவிழ
அவரத்தில்
வந்திறங்கிய
தூறல் மழையில்
விளையாட்டுக்கு
நாம் போட்ட
கணக்கை
மொத்தமாய்
நனைத்தது.....

அருள் நிலா வாசன்...
26.04.2014

Saturday, 18 April 2015

ஒரு தடவை எனக்காக

சாத்தி வைத்த
யன்னலுக்குள்
சரசரத்த
உன் நினைப்பு
இழுத்து வைத்து
என் கன்னத்தில்
ஏக்கமாய் கொஞ்சியது...

அந்த ஒரு
நொடிப்பொழுதில்
என் சத்தம்
உன் பக்கத்தில்
வரவில்லையென்று
நீ வருத்தப்பட்டாய்

உன்னசைவில்
நானிருக்க
உன்னோடு
தானிருக்க
என்னை 
விட்டுப்போய்
தூரமாகி
இருந்தாலும்

இன்னும் விடைதேடும்
பயணத்தில்
விடாமல் துடிக்கும்
என் இதயத்தில்
எப்பொழுதும்
கேட்கின்ற
ஏக்கத்தின்.....ஓசை
உன் காதில்
கேட்கவில்லை...

ஒரு தடவை எனக்காக
என் பக்கத்தில் 
இல்லாத
பகலும் இரவும்
பக்கம் பக்கமாய்
உன்னைப் படிக்கத்
தூண்டும்
என் விழிகளுக்குள்
தூங்கிக்கொண்டிருக்கும்
உன்னை
நான் எழுப்புவதேயில்லை

உன் விழியாக 
நானிருந்தால்
உனக்குள்ளும்
நானிருப்பேன்

அருள் நிலா வாசன்
18.04.2015                            


Friday, 10 April 2015

உண்மையாய் இருந்தால் உயிரோடு வந்துவிடு...

நீ எட்டிப் போனது
தெரியாமலே 
நான் கிட்ட 
வரும்போதெல்லாம்
எட்டிப் பார்க்கும்
என் நினைப்பு
உனக்குள்
ஏதோ ஒரு
உணர்வை
ஏற்படுத்துகிறது....

உன்னைப் புரிந்தும்
புரியாமல்
இருந்த
எனக்கு
இப்போது
புரிந்துவிட்டது...

என்னையும் உன்னையும்
பிரிக்க
எவராலும்முடியாது
உனக்குள்
இருக்கும்
அன்பு மட்டும்
உண்மையாய் இருந்தால்......

உயிரோடு வந்துவிடு
என் நினைவுகள்
உனக்குள் இருக்கும்வரை
என் கனவுகள்
உனக்காக வாழும்....

உனக்குள் இருக்கும்
என் இதயத்தை
ஒரு தடவை
உனக்காகத்
தொட்டுப் பார்
அது
எனக்காகத்தான்
இன்னும்
துடிக்கிறதா என்று......

உன்னையும்
என்னையும்
ஒன்றாகிப் பார்த்த
அந்த
முழு நிலவுமட்டும்
இப்பவும்அப்படியே
இருக்கிறது
ஒட்டியிருக்கும்
வானை
விட்டுப் போக
விருப்பமின்றி.....

அருள் நிலா வாசன்       

Thursday, 9 April 2015

இது கனவாய் இருக்கக்கூடாதா...?

நீவிட்டுச் சென்ற
பாதச் சுவடுகளை
நான்
தொட்டுத் தொட்டுப்
பார்க்கிறேன்

எட்டிப் பார்க்கும்
உன் நினைவுகளை
கட்டிப் பிடிக்க
நினைத்தாலும்
கைகளைத்
தட்டிவிடுகிறது
இடையில்
நுழைந்த 
உன் சின்னக் கோவம்

இரவுகள் பகலாய்
நீண்டதனால்
இடைவெளி
தாங்காப்
பொழுதுகளில்
இழுத்துவிட்ட
மூச்சிற்குள்
ஒட்டிக் 
கொண்டிருக்கிறது
விட்டுக் 
கொடுத்திருக்கலாமோ
என்ற
கேள்வியும் பதிலும்.... 

இது கனவாய்
இருக்கக்கூடாதா...?

இதயம் தொட்டு
எதையும் பகிர
எனக்குள் நீ
உனக்குள் நான்.

பிரிவொன்றை சந்திக்காமல்....

அருள் நிலா வாசன்          

Sunday, 5 April 2015

நீ வரும் போது

நீயில்லாத போது
நீட்டி விரித்து
நிமிர்ந்து படுக்க
நிம்மதி 
இருக்கவேயில்லை..

மாதமொரு
சேதிவந்து
மறுபடியும்
முடியுதிர
மண்டையில
சூடேறி
உச்சிபிரிக்க
முடியாமல்
இரண்டாகிப் பிரிந்துவிழ....

சொல்லிவைத்த
தேதி மட்டும்
சொடுக்கெடுத்து
மெல்ல மெல்ல
முன்னோக்கி
நகர்ந்துவர...

மரத்தடி அம்மனில்
நான் சாத்தி வைத்த
நம்பிக்கை
 நடுவழியில் திரும்பவர.....

குடம் பிரிந்து
குளமாகித்
தாண்டிவந்த
வயல் வெளியில்
தாறுமாறாய்
பெருகிக்கெடுக்க..

உச்சி முதல்
பாதம்வரை
உலகமெல்லாம்
சுற்றிவர...

தலைவாழை
இலைவிரித்துத்
தாவணியில்
திரை மறைத்து
புத்துயிரை
வரவழைத்து
கை நிறையக்
கொடுத்து....

பாரத்தை
இறக்கிவைத்த
பாட்டி
சொன்னதை எல்லாம்......

பக்குவமாய் 
எடுத்து
பரிதவித்த
மார்போடு
மறக்காமல்
மறுபடியும்
அணைத்து
மஞ்சள்துணி
போர்த்து வைத்தேன்..

ஏனென்று கேட்கிறியா...?

நீ வரும் போது
பிள்ளைக்கு
பெயர் வைக்கமுன்
உனக்கு
ஒவ்வொன்றாய்
எடுத்துச்சொல்லி
ஒத்திகை பார்க்கத்தான்...

அருள் நிலா வாசன்
05.04.2015