Friday, 9 October 2015

நித்திரையில் மட்டும்

வட்டிக்குப் பணம்
வாங்கி
வயல் காணியை
வங்கியில் வைத்து
வயசுக்கு வந்த
தங்கச்சியின்
வழையலை
வாங்கித் தரலாமென்று
உறுதிமொழியில்
முத்திரை குத்தி
பக்கத்து
வேலிக்கும் தெரியாமல்
வெளி நாட்டுக்கு
உன்னை
அனுப்பி வைத்தேன்...

தொலைவில்
ஒரு வெடிச்சத்தம்
விழுந்து படுத்த
உன் அப்பா
எழும்பவே இல்லை
வெள்ளைச் சேலை
என் துணையானது
படிப்பைப்
பாதியில் நிறுத்திய
தங்கச்சி திருமணம்
தவணை முறையில்
தள்ளிப் போனது

இப்போது
வெற்றுப் பத்திரமாய்
வெறுந்தரையில்
நான்
வாங்கிய
பணமெல்லாம்
வெடி வைக்கிறது
எனக்கு..

உத்தரவாதம் தந்த
நீ மட்டும்
அங்கு
நிரந்தரமாய்
பதிவிடமாம்
உலா வந்தது
உன் காதல்
கதையில்
முகவரியும்
தெரியாமல்
முகத்திரையும்
கிழியாமல்
முன்னேறிய
உன் பிழைப்பு...

முத்திரையில்
கையெழுத்து
முன் நம்பிக்கையில்
வைத்த எனக்கு
நித்திரையில்
மட்டும்
நிற்காமல்
அடிக்கிறது
உன்
தொலைபேசி
அழைப்பு..

இப்படியே
நான்
நீட்டி நிமிர்ந்துவிட்டால்
நிச்சயம்
வரும்
உனக்கொரு
கடைசி.......அழைப்பு
மகனே
அதுவரைக்கும்
நான் தான்
உன் அம்மா.....
அருள் நிலா வாசன்.
9.10.2015                                  .

No comments:

Post a Comment