Monday, 11 May 2015

முள்ளிவாய்க்காலில் ஒரு முகவரி.......

போருக்குப் பின்
ஊருக்காய் என்
பயணம்

அடிப்பெட்டியைக்
கிளறிய
என் கண்ணில்
அவனின் முகவரி
அப்படியே
அழியாமல்.......

 அவன்
ஆசைப்பட்டு கேட்ட
அந்தக்
கடிகாரம்

எனக்கென்று
அவனனுப்பி
வைத்த
கோடு போட்ட
சாரம்

அவனைக்
கண்டு கனகாலம்
என்
ஆவலுக்கு
அசைபோட்டு
அடுத்தமாதமே
அவசரமாய்
கிளம்பியது
என் 
ஆகாயப்பயணம்,,,,

அடுத்த நாள
யாழ்தேவி
அதிகாலை
அது கூவி
வடக்கு
வடக்கென்று
அது
அடித்து சொல்ல.......

மண்ணின் வாசனையில்
மனசெல்லாம் 
மழை பெய்ய
யன்னலோரமாய்
அப்படியொரு
சயனம்

அடுக்கடுக்காய்
அந்த நாள்
ஞாபகம்
அவனைக் காணத்
துடித்தது
என் மனம்

பெட்டியோடு
இறங்கினேன்
பெட்டிக்
கடையில்
வடையோடு
வெறும் தேத்தண்ணி.........

வருசக் கணக்கில்
ருசி தெரியாத
என் நாக்கு
சொன்னது
ஆஹா என்ன
அருமை.....

வாழைப்பழக்
கடை
வரிசையாய்
பல கடை
ஏறி இறங்கி
அவன் முகவரி
மட்டும் இன்னும்
அழியாம்ல
என் கையில்.......

பொடி நடையில்
இறங்கினேன்

போகப் போக
ஒரே வெளி
பொறுமையிழந்த
கால் வலி

விசாரித்துப் பிடித்த
அவன்
வீட்டுக்
கூரையைக்
காணவில்லை
வீட்டுக் கதவு
மட்டும்
பூட்டியே கிடந்தது....

அருள் நிலா வாசன்
                            


No comments:

Post a Comment