ஒடுங்கிய இரவுக்குள்
ஒத்தையாய்
நான்
உன்னை மட்டும்
தேடினேன்
ஒற்றைத் தாளில்
நீ எழுதி மடித்துக்
கதவின் இடுக்கில்
சொருகிய நேரம்
எட்டிப் பார்த்தது
உள் வீட்டில்
என்னைத்தேடிய
உன் கடிதம்
அதுசொன்ன
சோகத்தில்
வடிந்த ஈரத்தில்
ஊறிப் போனவை
நான் எடுத்துப்பிடித்த
இடத்தில்
பிரிந்தே கிளிந்தது
சில வரிகள்
உற்றுப் பார்க்கின்ற
போதே
பாதி மறைந்தது
தேடிப்படிக்கின்ற போது
ஒன்றுமே சொல்லாமல்
ஓங்கிஅறைந்தது
எஞ்சியிருந்த வரிகள்......
திருப்பமில்லாத
உன் ஒருவழிப் பயணத்தை
உணரத்தெரியாத
உனக்கென
இருந்த
என் மனம்
இன்னும்
நம்பிக்கை
இழக்காமல்.....
விரைந்து
மூடினேன்
யன்னல்களை
விளக்கை
ஏற்றினேன்
வெளிச்சத்தில்
உன் முகம்பார்க்க.......
காற்றுத் தள்ளித்
திறந்தவாசல்க்
கதவை
நான்
வெறுப்போடு
பார்க்கின்றேன்
காற்று
அது மட்டும்
தனியாக
வந்ததனால்......

No comments:
Post a Comment